பொங்கல் தொகுப்புடன் மண்பானையும், மண் அடுப்பையும் வழங்க வேண்டும்


பொங்கல் தொகுப்புடன் மண்பானையும், மண் அடுப்பையும் வழங்க வேண்டும்
x

தமிழகத்தில் பொங்கல் தொகுப்புடன் மண்பானையும், மண் அடுப்பையும் அரசு வழங்க வேண்டும் என்று மண்பாண்ட தொழிலாளர்கள் கோரிக்கை வைத்து உள்ளனர்.

திருவண்ணாமலை



தமிழகத்தில் பொங்கல் தொகுப்புடன் மண்பானையும், மண் அடுப்பையும் அரசு வழங்க வேண்டும் என்று மண்பாண்ட தொழிலாளர்கள் கோரிக்கை வைத்து உள்ளனர்.

பொங்கல் பண்டிகை

தமிழகத்தில் கொண்டாடப்படும் முக்கிய விழாக்களில் பொங்கல் பண்டிகையும் ஒன்றாகும். முந்தைய காலங்களில் பொங்கல் பண்டிகையன்று வீட்டில் கரும்பு வைத்து மண் அடுப்பில் மண் பானை வைத்து பொங்கலிடுவார்கள். ஆனால் காலமாற்றத்தால் மண்பானை மீது மோகம் குறைந்தாலும் இன்றும் பெரும்பாலான கிராமங்களில் பொங்கல், மாட்டுப்பொங்கல் தினங்களில் பழங்கால முறைப்படி புத்தம் புதிய மண்பானைகளிலேயே பொங்கல் வைத்து வழிபட்டு வருகின்றனர்.

ஆனால் தற்போது நகர்புறங்களிலும் மண்பாண்ட சமையலுக்கு வரவேற்பு இருந்தாலும் ஒவ்வொரு ஆண்டும் தீபத்திருநாள், பொங்கல் உள்ளிட்ட நாட்களில் மட்டுமே நகரில் உள்ளவர்களுக்கு மண்பாண்டங்கள் நினைவுக்கு வருகிறது. தற்போதைய சூழ்நிலையில் தமிழகத்தில் மண்பாண்ட பொருட்கள் தயாரிக்கும் தொழில் நலிவடைந்து வருகின்றது. தொழிலில் இளைய தலைமுறையினர் யாரும் ஆர்வம் காட்டுவது இல்லை என்று மண்பாண்ட தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

ரேஷன் கடைகள்

மேலும் கடந்த சில ஆண்டுகளாக பருவமாற்றங்கள், மண் தட்டுப்பாடு, மண்பானை தயாரிக்க பயன்படும் உபகரணங்களின் விலை ஏற்றம் மற்றும் தட்டுப்பாடு போன்ற காரணங்களாலும் இத்தொழில் தடுமாறி வருகிறது. அதிக விலை கொடுத்து களிமண், மண் வாங்கி வந்து உற்பத்தியில் ஈடுபட்டாலும் போதிய வருமானம் கிடைப்பதில்லை என்று அவர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.

கடந்த சில ஆண்டுகளாக தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் குடும்ப அட்டைதாரர்களுக்கும் அரசின் சார்பில் பொங்கலுக்கு தேவையான பச்சரிசி, சர்க்கரை, கரும்பு உள்ளிட்ட பொருட்களை கொண்ட தொகுப்புகள் வழங்கப்பட்டு வருகின்றது. இந்த பொங்கல் தொகுப்புடன் பொங்கல் வைக்க மண்பானையும், மண் அடுப்பும் மண்பாட தொழிலாளர்களிடம் இருந்து அரசு கொள்முதல் செய்து குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லாமல் வழங்க வேண்டும் என்று மண்டபாண்ட தொழிலாளர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

இதுகுறித்து சமீபத்தில் திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்திலும் அவர்கள் கோரிக்கை மனு அளித்தனர்.

மண்பாண்ட தொழிலாளா்கள் கோரிக்கை

வடமாநிலங்களில் பல்வேறு ரெயில் நிலையங்களில் டீ, காபி குடிக்க மண்ணால் செய்யப்பட்ட குடுவை பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இதனால் அந்த பகுதியில் மண்பாண்ட தொழிலாளர்களின் வாழ்வில் ஒளியேற்றி உள்ளனர்.

அதேபோல் பொங்கல் தொகுப்புடன் மண் பானையும், மண் அடுப்பும் சேர்த்து வழங்க வேண்டும் என்று மண்பாண்ட தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். எனவே இதுகுறித்து அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்து உள்ளனர்.

செங்கம் தாலுகா மேல்பள்ளிப்பட்டு முருகன் கூறியதாவது:-


மண்பாண்ட தொழில் தற்போது நலிவடைந்து வருகின்றது. விழாக்காலங்களில் மட்டுமே மண்பாண்ட பொருட்கள் பெரும்பாலும் விற்பனை செய்யப்படுகிறது. போதிய வருமானம் இல்லாததால் இந்த தொழிலை செய்து கொண்டிருந்தவர்கள் மாற்று தொழில் செய்ய சென்று விடுகின்றனர். எனவே அரசு பொங்கல் தொகுப்பு பொருட்களுடன் மண் பானையும், மண் அடுப்பையும் வழங்கினால் இத்தொழில் மீண்டும் வளம் பெறும்.

முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றதில் இருந்து பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு மக்களின் நலனில் அக்கறையுடன் செயல்பட்டு வருகிறார். இந்த திட்டத்தினையும் அவர் செயல்படுத்தினால் மண்பாண்ட தொழிலாளர்களின் வாழ்க்கை புத்துயிர் பெறும்.

மேலும் மழை காலங்களில் மண்பாண்ட தொழிலாளர்களுக்கு நலவாரியத்தின் மூலம் ரூ.5 ஆயிரம் நிவாரணம் வழங்கப்பட்டு வந்தது. நலவாரியம் மூலம் மீண்டும் கணக்கெடுத்து மண்பாண்ட தொழிலாளர்களுக்கு நிவாரண தொகை வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மக்கள் ஆர்வம்

ஆதமங்கலம் புதூர் பகுதியை சேர்ந்த வெங்கட்ராமன் கூறியதாவது:-



நவீன காலத்திற்கு ஏற்ப மக்கள் இருந்தாலும் தற்போது மண்பாண்ட பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் மண்பாண்டங்கள் தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகிறோம். மண்பானைகள் தயாரிக்கும் உபகரணங்கள் அனைவருக்கும் கிடைப்பதில்லை.

பொங்கல் தொகுப்புடன் அரசு கூட்டுறவு சங்கங்கள் மூலம் மண்பாண்ட தொழிலாளர்களிடம் இருந்து மண்பானையும், மண் அடுப்பையும் கொள்முதல் செய்து வழங்கினால் மண்பாண்ட தொழிலாளர்கள் வாழ்வாதாரம் உயரும். தொடர்ந்து இத்தொழில் செய்பவர்களுக்கு வேலை கிடைக்கும். இதனால் வறுமையில் வாடும் தொழிலாளர்களின் வாழ்க்கையும் புத்துயிர் பெரும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story