விபத்தில் நகராட்சி ஊழியர் பலி
விபத்தில் நகராட்சி ஊழியர் பலி
திருமங்கலம்
திருமங்கலம் அருகே சுங்குராம்பட்டியை சேர்ந்தவர் மாரியப்பன். இவருடைய மகன் விஜய் (வயது 25). இவருக்கு திருமணம் ஆகவில்லை. இவர் தேவக்கோட்டை நகராட்சியில் ஊழியராக பணியாற்றி வந்தார். வாரம் ஒருமுறை வீட்டிற்கு வந்து செல்வது வழக்கம். வழக்கம்போல் நேற்று வீட்டிற்கு வந்துள்ளார். வீட்டில் இருந்து மதுரை சென்று விட்டு திருமங்கலம் நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது பலத்த மழை பெய்து கொண்டிருந்தது. திருமங்கலம் அருகே மறவன்குளம் பஸ் நிறுத்தம் பகுதியில் சரக்கு வேன் நின்று கொண்டிருந்தது. பலத்த மழை பெய்ததால் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த விஜய் நிலைதடுமாறி நின்று கொண்டிருந்த சரக்கு வேன் மீது மோதியதாக தெரிகிறது. இதில் படுகாயம் அடைந்த விஜய், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
விபத்து குறித்த தகவல் அறிந்ததும், திருமங்கலம் நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.