போலீஸ் வேடத்தில் வந்து 2 பேரிடம் ரூ.40 லட்சம் பறித்த மர்மகும்பல்


போலீஸ் வேடத்தில் வந்து 2 பேரிடம் ரூ.40 லட்சம் பறித்த மர்மகும்பல்
x

500 ரூபாய் நோட்டு கொடுத்தால் ரூ.2 ஆயிரம் நோட்டு தருவதாக கூறி 2 பேரிடம் போலீஸ் வேடத்தில் வந்து ரூ.40 லட்சம் பறித்தது தொடர்பாக 4 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

வேலூர்

500 ரூபாய் நோட்டு கொடுத்தால் ரூ.2 ஆயிரம் நோட்டு தருவதாக கூறி 2 பேரிடம் போலீஸ் வேடத்தில் வந்து ரூ.40 லட்சம் பறித்தது தொடர்பாக 4 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ரூ.500 நோட்டுக்கு ரூ.2 ஆயிரம் நோட்டு

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை சேர்ந்தவர் ஞானபிரகாஷ் (வயது 26), மின்வாரிய ஒப்பந்ததாரர். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை சேர்ந்தவர் முகமது ஜமீல், ஓட்டுனர் பயிற்சி பள்ளி உரிமையாளர். இவர்களை கடந்த சில நாட்களுக்கு முன்பு மர்மநபர் செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார்.

அப்போது தான் பெங்களூருவில் இருந்து பேசுவதாகவும், 500 ரூபாய் நோட்டு ஒன்று கொடுத்தால் அதற்கு ஈடாக 2 ஆயிரம் ரூபாய் நோட்டு தருவதாகவும், மீண்டும் ஓரிரு நாளில் தொடர்பு கொண்டு பணம் மாற்றும் இடம் உள்ளிட்ட விவரங்களை தெரிவிப்பதாகவும், அதற்குள் உங்களால் முடிந்த அளவு பணத்தை தயார் செய்யும் படியும் கூறியுள்ளார்.

ரூ.40 லட்சம் பறிப்பு

4 மடங்கு பணம் கிடைக்கும் என்ற ஆசையில் ஞானபிரகாஷ் ரூ.25 லட்சமும், முகமது ஜமீல் ரூ.15 லட்சமும் ஏற்பாடு செய்து மர்மநபரை தொடர்பு கொண்டு பணம் தயாராக உள்ளது என்று தெரிவித்தனர்.

அப்போது அந்த மர்ம நபர் தனது நண்பர்களுடன் வேலூரில் வைத்து பணத்தை பெற்று கொள்வதாக கூறினார். அதன்படி இருவரும் பணத்துடன் வேலூருக்கு வந்தனர். கொணவட்டம் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையோரம் இருவரிடம் இருந்து 4 பேர் கொண்ட மர்மகும்பல் பணத்தை பெற்றுக் கொண்டு பேசிக்கொண்டிருந்தனர்.

அப்போது காரில் போலீஸ் சீருடை அணிந்து வந்த நபர் ஒருவர், துணை போலீஸ் சூப்பிரண்டு என்று அறிமுகம் செய்து கொண்டு அவர்களிடம் தனித்தனியாக விசாரணை நடத்தினார். அப்போது ஞானபிரகாஷ், முகமது ஜமீல் ஆகியோர் பணம் மாற்ற வந்த தகவலை தெரிவித்தனர்.

பணம் மாற்றுவது குற்றமாகும். உரிய ஆவணங்களை காண்பித்து பணத்தை அருகே உள்ள போலீஸ் நிலையத்தில் வாங்கி கொள்ளுங்கள் என்று 2 பேரிடம் இருந்து ரூ.40 லட்சத்தை போலீஸ் சீருடை அணிந்திருந்த மர்மநபர் வாங்கி விட்டு அங்கிருந்து காரில் சென்றார். இதைடுத்து மர்மகும்பலும் அங்கிருந்து சென்றனர்.

4 பேரிடம் விசாரணை

பணத்தை பறிகொடுத்த இருவரும் வேலூர் வடக்கு போலீஸ் நிலையம் வந்து அங்கிருந்த போலீசாரிடம் நடந்த சம்பவத்தை கூறி பணத்தை தரும்படி கேட்டனர். அதற்கு போலீசார் தாங்கள் யாரும் அவ்வாறு பணம் பெறவில்லை என்று கூறினர். அப்போதுதான் 2 பேருக்கும் மர்ம கும்பல் தங்களிடம் இருந்து ரூ.40 லட்சத்தை நூதன முறையில் ஏமாற்றி பறித்து சென்றது தெரிய வந்தது.

அதையடுத்து ஞானபிரகாஷ், முகமது ஜமீல் தனித்தனியாக போலீசில் புகார் அளித்தனர். அதன் பேரில் வேலூர் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் வழக்குப்பதிந்து மர்மநபர் பேசிய செல்போன் எண்களை வைத்து பெங்களூருவை சேர்ந்த 4 பேரை பிடித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story