விவசாய நிலத்தில் திடீரென ஏற்பட்ட மர்ம குழியால் பரபரப்பு
கிருஷ்ணராயபுரம் அருகே விவசாய நிலத்தில் திடீரென ஏற்பட்ட மர்ம குழியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
வயலில் மர்மகுழி
கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் ஒன்றியம், வீரியபாளையம் ஊராட்சி கண்ணம்முத்தாம்பட்டியை சேர்ந்தவர் குமார். விவசாயி. இவருக்கு சொந்தமான மானாவாரி விவசாய நிலம் அப்பகுதியில் உள்ளது. இந்த நிலத்தில் நேற்று குமார் தனது மாடுகளை மேய்த்து கொண்டிருந்தார். அப்போது ஒரு மாட்டின் கால்கள் திடீரென நிலத்தில் புதைந்தது. பின்னர் சிறிது தொலைவில் சுமார் 3 அடி அகலம், 7 அடி ஆழத்தில் மர்ம குழி ஒன்று இருந்தது.
பரபரப்பு
இதனால் அதிர்ச்சி அடைந்த குமார் உடனடியாக ஊராட்சி மன்ற தலைவர் ராமசாமி, கிராம நிர்வாக அலுவலர் மகாராஜா ஆகிேயாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர். மேலும், இதுகுறித்து தகவல் அறிந்த அப்பகுதி பொதுமக்கள் கூட்டம், கூட்டமாக வந்து அந்த மர்மகுழியை பார்த்து விட்டு சென்றனர். மேலும், குழி தோண்டியதற்கான எந்த அறிகுறியும் இல்லாததால், இது பழங்காலத்து தானிய குழியாக இருக்கலாம் என அப்பகுதி பெரியோர்கள் தெரிவித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.