கடலில் மிதந்து வந்த மர்ம பொருள்
பூம்புகார் அருகே வாணகிரியில் கடலில் மர்ம பொருள் மிதந்து வந்தது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவெண்காடு:
பூம்புகார் அருகே வாணகிரியில் கடலில் மர்ம பொருள் மிதந்து வந்தது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கரை ஒதுங்கிய மர்ம பொருள்
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வாணகிரி கடற்பகுதியில் நேற்று முன்தினம் கடலில் மர்ம பொருள் ஒன்று மிதந்து வந்தது. இதைபார்த்த மீனவர்கள் அந்த பொருளை கடற்கரைக்கு இழுத்து வந்தனர்.பின்னர் இதுகுறித்து கடலோர காவல் படையினருக்கு தகவல் தெரிவித்தனர்.அதன் பேரில் கடல்சார் சட்ட அமலாக்கப் பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் வெர்ஜீனியா மற்றும் கடலோர காவல் படை போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து கடலில் மிதந்து வந்த மர்ம பொருளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
ஆராய்ச்சிக்கு பயன்படுத்தப்படும் கருவி
இந்த பொருள் கடலில் ஆராய்ச்சி செய்வதற்காக பயன்படுத்தப்படும் போயா என்பது தெரிய வந்துள்ளது. மேலும் இந்த பொருள், சென்னையில் உள்ள மத்திய அரசின் தேசிய கடல்சார் தொழில் நுட்ப நிறுவனத்துக்கு சொந்தமானது என்பது தெரிய வந்தது. ஆராய்ச்சியின் போது இந்த கருவி கடல் அலையில் அடித்து வரப்பட்டதும் தெரிய வந்தது. சென்னையில் இருந்து ஆராய்ச்சி நிலைய அதிகாரிகள் வாணகிரிக்கு வந்து போயாவை எடுத்து செல்ல உள்ளதாக போலீசார் தெரிவித்தனர். தற்போது போயா வாணகிரி மீனவ கிராமத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. இதை மீனவர்கள் மற்றும்பொதுமக்கள் வந்து ஆர்வத்துடன் பார்த்து சென்றனர்.