வெளிநாட்டுக்கு வேலைக்கு செல்வோர் பாதுகாப்புக்காக பெயர் பதிவு செய்யும் செயலி விரைவில் அறிமுகம்


வெளிநாட்டுக்கு வேலைக்கு செல்வோர் பாதுகாப்புக்காக பெயர் பதிவு செய்யும் செயலி விரைவில் அறிமுகம்
x

வெளிநாட்டுக்கு வேலைக்கு செல்வோர் தங்களின் பாதுகாப்புக்காக பெயர் பதிவு செய்யும் செயலி விரைவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக அமைச்சர் செஞ்சி மஸ்தான் கூறினார்.

சென்னை,

சென்னை தலைமைச் செயலகத்தில் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் நிருபர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:-

அயலக தமிழர் தினத்தை ஆண்டுதோறும் கொண்டாட வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு ஜனவரி 11 மற்றும் 12-ந் தேதியன்று இந்த தினத்தை கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்க உள்ளனர்.

அயலக தமிழர் தின விழாவில் பங்கேற்க விரும்புகிறவர்கள் தங்கள் பெயரை, அயலக தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை ஆணையகத்தின் இணையதளத்தில் பதிவு செய்யும் வசதியை தொடங்கி இருக்கிறோம்.

இந்த 2 நாட்களிலும் கலந்து கொள்ள விரும்புகிறவர்கள் அந்த இணையத்தில் பெயர் பதிவு செய்ய வேண்டும். பல தகவல்களை இந்த இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

பெயர் பதிவு

வெளிநாட்டுக்கு வேலைக்கு செல்பவர்கள், தமிழக அரசிடம் தங்களின் பெயரை பதிவு செய்துவிட்டு சென்றால் அவர்களுக்கு தகுந்த சட்டப்பாதுகாப்பை அரசு அளிக்க இருக்கிறது. அதுதொடர்பான செயலி (ஆப்) விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. அதற்கான அறிவிப்பை முதல்-அமைச்சர் விரைவில் வெளியிடுவார். அதில் பல நலத்திட்டங்களும் உள்ளன.

மீட்கப்பட்டவர்கள்

இதுவரை வெளிநாட்டில் சிக்கித்தவித்த 1,674 பேரை மீட்டிருக்கிறோம். கம்போடியா, மியான்மரில் இருந்து 64 பேர் சமீபத்தில் மீட்கப்பட்டுள்ளனர். இதில் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். எந்த நாட்டுக்கு, எந்த வேலைக்கு செல்கிறோம்? என்பதை தெரிந்துகொண்டு செல்ல வேண்டும். ஆசை வார்த்தைகளுக்கு ஆட்பட்டு அங்கு போய் சிக்கிக்கொள்கின்றனர்.

வேலை வாய்ப்பு தகவல் தருபவர்கள், பதிவு செய்யப்பட்ட முகவர்தானா? என்பதையும், அவர்கள் கூறும் வேலையின் உண்மைத்தன்மை என்ன? என்பதையும் அறிந்த பிறகே செல்ல வேண்டும்.

புகார்கள்

இதில் விழிப்புணர்வை ஏற்படுத்த, அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் தகவல் அனுப்பி இருக்கிறோம். போலி முகவர்களால் ஏமாற்றப்பட்டவர்கள், அந்தந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் கொடுத்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று துறை சார்பில் கூறியிருக்கிறோம்.

திருச்சியில் 2 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். செங்கல்பட்டு, மதுரையிலும் புகார் மீது விசாரணை நடக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story