ரூ.50½ லட்சத்தில் கட்டப்பட்ட புதிய பாலம் இடிந்து விழுந்தது: படகில் கொள்ளிடம் ஆற்றை கடந்து பள்ளிக்கு சென்று வரும் மாணவர்கள் ஆபத்து என்று தெரிந்தும் வேறுவழியின்றி செல்வதாக பேட்டி
ரூ.50½ லட்சத்தில் கட்டப்பட்ட புதிய பாலம் இடிந்து விழுந்ததால் படகில் கொள்ளிடம் ஆற்றை கடந்து மாணவர்கள் பள்ளிக்கு சென்று வருகிறார்கள். இது ஆபத்தான பயணம் என்று தெரிந்தும் வேறுவழியின்றி செல்வதாக அவர்கள் கூறினர்.
சிதம்பரம்,
சிதம்பரம் அருகே கொள்ளிடம் ஆற்றின் கரையோரம் உள்ள அக்கரை ஜெயங்கொண்டபட்டினம், கீழ குண்டலபாடி, திட்டுக்காட்டூர் ஆகிய கிராமங்களில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இந்த கிராமங்களை சேர்ந்த மாணவ-மாணவிகள் பள்ளி, கல்லூரிக்கு செல்வதற்கும், மக்கள் வேலைக்கு சென்று வருவதற்கும் கொள்ளிடம் ஆற்றை கடந்து ஜெயங்கொண்டபட்டினத்துக்கு வந்து தான் செல்ல வேண்டும். காவிரி ஆற்றில் இருந்து உபரிநீர் கொள்ளிடத்தில் திறந்து விடும்போதும், மழைக்காலத்திலும் கொள்ளிடத்தில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும்போதும் ஆற்றை கடக்க முடியாது. அந்த சமயத்தில் 12 கிலோ மீட்டர் சுற்றிதான் கிராம மக்கள் தங்கள் பகுதிக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது.
இடிந்து விழுந்த புதிய பாலம்
3 கிராம மக்களின் ஒட்டுமொத்த குரலை ஏற்று தமிழக அரசு ரூ.50 லட்சத்து 64 ஆயிரத்தை ஒதுக்கியது. இதையடுத்து அக்கரைஜெயங்கொண்ட பட்டினத்தையும், ஜெயங்கொண்டபட்டினத்தையும் இணைக்கும் வகையில் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே பாலம் கட்டும் பணி முழுவீச்சில் நடைபெற்று வந்தது. பணிகள் முடிவடைந்த நிலையில் அந்த பாலம் வழியாக கிராம மக்கள் நடந்தும், இருசக்கர வாகனங்களிலும் சென்று வந்தனர்.
இந்த நிலையில் கடந்த மாதம் மேட்டூர் அணை நிரம்பியதால் அதிகளவு தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் கொள்ளிடம் ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இந்த வெள்ளத்துக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் புதிதாக கட்டப்பட்ட பாலம் இடிந்து விழுந்தது.
வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டது
மேலும் சமீபத்தில் சிதம்பரத்தில் ஒரே நாளில் 30 செ.மீ. மழை கொட்டித்தீர்த்தது. இதனால் கொள்ளிடம் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இந்த வெள்ளத்தால், ஏற்கனவே இடிந்து விழுந்திருந்த பாலத்தின் ஒரு பகுதி முழுமையாக அடித்துச்செல்லப்பட்டது.
இதனால் அக்கரை ஜெயங்கொண்டபட்டினம்-ஜெயங்கொண்டபட்டினத்துக்கு இடையேயான நேரடி போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. கொள்ளிடம் ஆற்றில் வெள்ளம் குறையாததாலும், வினாடிக்கு 5 ஆயிரத்துக்கு மேல் தண்ணீர் செல்வதாலும் 12 கிலோ மீட்டர் சுற்றி சென்று வருகிறார்கள்.
படகில் ஆபத்தான பயணம்
இவ்வாறு சுற்றி செல்வதால் 3 கிராம மக்களுக்கும் கால விரயம் மற்றும் கூடுதல் செலவினம் ஏற்பட்டுள்ளது. இதை குறைக்கும் வகையில் கிராம மக்களும், பள்ளி, கல்லூரிக்கு மாணவ-மாணவிகளும் படகு மூலம் ஆபத்தான முறையில் ஆற்றை கடந்து சென்று வருகிறார்கள். இதைதவிர்க்க கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே புதிதாக மேம்பாலம் கட்டித்தர வேண்டும் என்று 3 கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது பற்றி அக்கரை ஜெயங்கொண்டபட்டினத்தை சேர்ந்த மாணவிகள், கிராம மக்கள் பேட்டி அளித்தனர். அதன் விவரம் வருமாறு:-
வேறுவழி இல்லை
மாணவி எழில்ஓவியா:-
நான் ஜெயங்கொண்ட பட்டினத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறேன். தினமும் கொள்ளிடம் ஆற்றை கடந்து தான் பள்ளிக்கு செல்ல முடியும். ஆற்றை கடந்து செல்வதற்காக போடப்பட்ட புதிய பாலம் கடந்த மாதம் ஏற்பட்ட வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதாலும், ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியதாலும் சில நாட்கள் பள்ளிக்கூடத்துக்கு செல்லவில்லை. சில நாட்கள் 12 கிலோ மீட்டர் சுற்றி பள்ளிக்கு சென்றோம். அந்த சாலையும் பழுதடைந்து உள்ளதால் பள்ளிக்கு செல்ல காலதாமதம் ஏற்படுகிறது. தற்போது வெள்ளம் குறைந்துள்ளதால் ஆபத்து என்று தெரிந்தும் வேறு வழியில்லாமல் படகில் பள்ளிக்கு சென்று வருகிறோம்.
பள்ளிக்கு செல்ல மாட்டோம்
மாணவி அப்ரஜித்தா:-
எங்கள் கிராமத்தில் இருந்து பள்ளிக்கு படகில் தான் சென்று வருகிறோம். படகு ஓட்டுனர் இல்லை என்றாலும், கொள்ளிடம் ஆற்றில் வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடிக்கு மேல் தண்ணீர் சென்றாலும் பள்ளிக்கு செல்லாமல் வீட்டிற்கு சென்று விடுவோம். இவ்வாறாக பள்ளிக்கு பல நாட்கள் விடுப்பு எடுத்திருக்கிறேன். நாங்கள் அவசரத்திற்கு கூட மருத்துவமனைக்கு செல்ல முடியாத நிலை உள்ளது. இதனால் பொதுமக்கள், முதியவர்கள், கர்ப்பிணிகள் பெரிதும் பாதிப்பு அடைந்து வருகிறார்கள். இதற்கு அரசும், மாவட்ட நிர்வாகமும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேம்பாலம் வேண்டும்
அக்கரைஜெயங்கொண்டபட்டினம் கலைவாணி:-
புதிய பாலம் கட்டி சில நாட்களே அதை பயன்படுத்தினோம். அதற்குள் அந்த பாலம் இடிந்து விழுந்து விட்டது. காவிரியில் இருந்து உபரிநீர் திறந்து விடும்போதும், மழைக்காலத்திலும் எங்களது கிராமம் தீவுபோல் மாறி விடுகிறது. எனவே நாங்கள் ஆற்றை கடந்து செல்லும் வகையில் அக்கரை ஜெயங்கொண்ட பட்டினத்திற்கும், ஜெயங்கொண்டபட்டினத்திற்கும் இடையே கொள்ளிடம் ஆற்றில் மேம்பாலம் கட்டித்தர வேண்டும்.