திருப்பத்தூர் மாவட்ட ஊராட்சி குழுவுக்கு ரூ.5 கோடியில் புதிய கட்டிடம் கட்டப்படும்
திருப்பத்தூர் மாவட்ட ஊராட்சி குழுவுக்கு ரூ.5 கோடியில் புதிய கட்டிடம் கட்ட இடம் தேர்வு செய்யப்பட உள்ளது என மாவட்ட ஊராட்சி குழு கூட்டத்தில் தலைவர் சூரியகுமார் தெரிவித்தார்.
திருப்பத்தூர் மாவட்ட ஊராட்சி குழுவுக்கு ரூ.5 கோடியில் புதிய கட்டிடம் கட்ட இடம் தேர்வு செய்யப்பட உள்ளது என மாவட்ட ஊராட்சி குழு கூட்டத்தில் தலைவர் சூரியகுமார் தெரிவித்தார்.
மாவட்ட ஊராட்சி குழு கூட்டம்
திருப்பத்தூர் மாவட்ட ஊராட்சி குழு கூட்டம் சு.பள்ளிப்பட்டு ஊராட்சி பகுதியில் உள்ள மாவட்ட ஊராட்சி குழு கட்டிடத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட ஊராட்சி குழு தலைவர் என்.கே.ஆர்.சூரியகுமார் தலைமை வகித்தார். துணை தலைவர் என்.பிரியதர்ஷினி ஞானவேல் முன்னிலை வகித்தார். மாவட்ட ஊராட்சி செயலாளர் கு.பிச்சாண்டி வரவேற்றார்.
கூட்டத்தில் நடைபெற்ற விவாதங்கள் வருமாறு;
செயலாளர் கு.பிச்சாண்டி: மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் வார்டுகளில் 2021-22-ம் ஆண்டுக்கான பணிகளை உடனடியாக முடித்து தர வேண்டும்.
முனிவேல், கே.ஏ.குணசேகரன், கவிதா, சி.கே. சுப்பிரமணி (தி.மு.க.), சுபாஷ் சந்திர போஸ் (வி.சி.க.) மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் வார்டுகளில் என்ன பணிகள் வருகிறது என்று எங்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். பணிகள் நடப்பதை பொறியாளர்கள் பார்வையிட வேண்டும்
தலைவர் என்.கே.ஆர்.சூர்யகுமார் பதில்: மாவட்ட ஊராட்சி குழு ஒன்றிய குழு உறுப்பினர் வார்டுகள், ஊராட்சி மன்ற பகுதிகள், மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டம் உள்ளிட்ட பல்வேறு பணிகளை பார்வையிட பொறியாளர்கள் பற்றாக்குறை உள்ளது. எனவே மாவட்ட ஊராட்சிக்கென தனியாக பொறியாளர்களை நியமிக்க கூறி தமிழக அரசிடம் மனு அளிக்கலாம்.
கவிதா (தி.மு.க.): மாவட்ட ஊராட்சி குழு சார்பில் பாய்ச்சல் பகுதியில் நடைபெறும் பணிக்கு ஒன்றிய பொறியாளரை வரக்கூறியதற்கு கலெக்டர் கூறினால் மட்டும் தான் வர முடியும் என கூறுகிறார்.
பிரியதர்ஷினி ஞானவேல் (தி.மு.க.): மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்களுக்கு வளர்ச்சிப் பணிகள் செய்ய நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
இவ்வாறு விவாதம் நடந்தது.
புதிய கட்டிடம்
இதனை தொடர்ந்து மாவட்ட ஊராட்சி குழு தலைவர் என்.கே.ஆர். சூரியகுமார் கூறுகையில், ''தற்போது மழை காரணமாக பல்வேறு இடங்களில் உள்ள பள்ளி கட்டிடங்கள் மற்றும் அங்கன்வாடி கட்டிடங்களை அகற்றி புதிய கட்டிடம் கட்ட கலெக்டர் உத்தரவிட்டு உள்ளார்.
மாவட்ட ஊராட்சி குழு கட்டிடம் கட்ட இடம் தேர்வு செய்யப்பட்டு வருகிறது. அதன்படி மாவட்ட ஊராட்சி குழுவுக்கு ரூ.5 கோடியில் புதிய அலுவலகம் கட்டப்படும் என்றார்.
கூட்டத்தில் ஒன்றிய பொறியாளர்கள் செல்வி, சேகர் சுதாகர் மாவட்ட ஊராட்சி குழு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.