புதிய சுகாதார நிலையம் கட்டித்தர வேண்டும்


புதிய சுகாதார நிலையம் கட்டித்தர வேண்டும்
x
தினத்தந்தி 30 May 2023 12:15 AM IST (Updated: 30 May 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

வெள்ளப்பள்ளத்தில் புதிய சுகாதார நிலையம் கட்டித்தர வேண்டும் என்று தலைஞாயிறில் நடந்த ஒன்றியக்குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

நாகப்பட்டினம்

வாய்மேடு:

வெள்ளப்பள்ளத்தில் புதிய சுகாதார நிலையம் கட்டித்தர வேண்டும் என்று தலைஞாயிறில் நடந்த ஒன்றியக்குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

ஒன்றியக்குழு கூட்டம்

தலைஞாயிறு ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக்குழு தலைவர் தமிழரசி தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அண்ணாதுரை, பாலமுருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் ஒன்றிய குழு உறுப்பினர்கள் பேசியதாவது:-

செல்வி சேவியர்(தி.மு.க.):- நீர் முளை பகுதியில் குடிநீர் சரிவர கிடைக்க செய்ய வேண்டும்.

மகேந்திரன்(இந்திய கம்யூனிஸ்டு):- கலைஞர் வீடு கட்டும் திட்ட பயனாளிகளுக்கு உடனடியாக வீடு கட்டி கொடுக்க வேண்டும். கஸ்தூரி(தி.மு.க.):- வெள்ளப்பள்ளத்தில் புதிதாக சுகாதார நிலையம் கட்டித்தர வேண்டும்.

கொள்ளிடம் கூட்டுக்குடிநீர்

உதயகுமார்(தி.மு.க.):- நாலுவேதபதி மூக்காச்சி காடு சாலையை மேம்பாடு செய்து தர வேண்டும்.

மாசிலாமணி(தி.மு.க.):- கோவில் பத்து பகுதியில் புதிதாக கிராம நிர்வாக அலுவலகம் கட்டித்தர வேண்டும்.

ஞானசேகரன்(மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு):- கடந்த பல வருடங்களாக கொத்தங்குடி தொழுதூர் பகுதிகளில் கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்ட குடிநீர் இல்லாமல் பொதுமக்கள் மிகுந்த கஷ்டம் அடைகின்றனர். உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழரசி (தலைவர்): உறுப்பினர்களின் கோரிக்கைகள் நிதிநிலைக்கு ஏற்ப படிப்படியாக செய்து தரப்படும். முடிவில் மேலாளர் மகேஷ் நன்றி கூறினார்.


Next Story