அரசு பள்ளிக்கு புதிய சமையலறை கூடம் கட்டப்பட்டது
கரம்பயம்:
பழுதடைந்த சமையலறை கூடம்
பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஏனாதி ஊராட்சியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் சமையலறை கூடம் பழுதடைந்து இருந்தது. இதனால் மரத்தடியில் மாணவ-மாணவிகளுக்கு உணவு சமைக்கப்பட்டு வந்தது.
புதிய சமையலறை கூடம் கட்ட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதுகுறித்த செய்தி 'தினத்தந்தி' நாளிதழில் வெளிவந்தது. அதனை தொடர்ந்து ஊராட்சி மன்ற தலைவர் தீபிகா சுதாகர் ஊராட்சி ஒன்றியத்தை அணுகி சமையல் கூடம் கட்ட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
புதிதாக கட்டப்பட்டது
இதன் எதிரொலியாக ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில் ரூ.5.60 லட்சம் செலவில் புதிய சமையல் கூடம் கட்டப்பட்டு செயல்பட்டு வருகிறது.
தற்போது அந்த சமையல் கூடத்தில் மாணவர்களுக்கு சத்துணவு தயார் செய்யபட்டு வருகிறது. உடன் நடவடிக்கை எடுத்த ஊராட்சி மன்ற தலைவருக்கும், செய்தி வெளியிட்ட 'தினத்தந்தி' நாளிதழுக்கும் பெற்றோர்களும், சமூக ஆர்வலர்களும் நன்றி தெரிவித்துள்ளனர்.