24 மணி நேரமும் குடிநீர் கிடைக்க ரூ.300 கோடியில் புதிய திட்டம்; மேயர் தகவல்
நெல்லை மாநகரில் பொதுமக்களுக்கு 24 மணி நேரமும் குடிநீர் கிடைக்க ரூ.300 கோடியில் திட்டம் உள்ளதாக மாநகராட்சி கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
நெல்லை மாநகரில் பொதுமக்களுக்கு 24 மணி நேரமும் குடிநீர் கிடைக்க ரூ.300 கோடியில் திட்டம் உள்ளதாக மாநகராட்சி கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
மாநகராட்சி கூட்டம்
நெல்லை மாநகராட்சி கூட்டம் நேற்று நடைபெற்றது. மேயர் பி.எம்.சரவணன் தலைமை தாங்கினார். துணை மேயர் கே.ஆர்.ராஜூ, ஆணையாளர் சிவகிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தை தொடங்கி வைத்து மேயர் பேசுகையில், 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியை சென்னை மாமல்லபுரத்தில் உலகமே வியக்கும் அளவுக்கு நடத்தி வரும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும், அரசுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நெல்லை மாநகரில் 55 வார்டுகளிலும் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் அளவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. அரியநாயகிபுரம் கூட்டு குடிநீர் திட்டத்தில் வருகிற 10-ந்தேதிக்குள் 44 மேல்நிலை நீர்தேக்க தொட்டிகளில் தண்ணீர் ஏற்றி வினியோகம் செய்யப்படும். இதனால் நெல்லை மாநகரில் பொதுமக்களுக்கு சீரான குடிநீர் கிடைக்கும்'' என்றார்.
குடிநீர் திட்டம்
பாளையங்கோட்டை மண்டல தலைவர் பிரான்சிஸ் பேசுகையில், அரியநாயகிபுரம் தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டம் பாளையங்கோட்டை மண்டல பகுதிக்கு எப்போது வந்து சேரும்?. பாதாள சாக்கடை அமைக்கும் பணி பாதியில் நிற்கிறது. 6-வது தீர்மானத்தில் குடிநீர் நீரேற்று நிலையங்களில் உள்ள பணிகளை தனியாரிடம் ஒப்படைக்க போவதாக கூறப்படுகிறது. அதை ஒரே நபரிடம் ஒப்படைக்கக்கூடாது.
நெல்லை மண்டல தலைவர் மகேசுவரி பேசுகையில், நெல்லை டவுன் மண்டலத்தில் ஆடறுப்பு மனைக்கான டெண்டர் பற்றி எங்கள் மண்டலத்தில் உள்ள எந்த கவுன்சிலருக்கும் அதுபற்றிய தகவல் தெரிவிக்கவில்லை.
தீர்மானம் ஒத்திவைப்பு
இதே கருத்தை வலியுறுத்தி டவுன் மண்டல கவுன்சிலர்கள் மற்றும் பிற தி.மு.க. கவுன்சிலர்கள் இருக்கையை விட்டு எழுந்து சென்று மேயர், துணை மேயர், ஆணையாளர் இருக்கையை முற்றுகையிட்டு கோரிக்கையை வலியுறுத்தினார்கள். இதையடுத்து அந்த தீர்மானம் ஒத்தி வைக்கப்பட்டது.
தச்சை சுப்பிரமணியன் (தி.மு.க) பேசுகையில், டெண்டர் விஷயத்தில் இப்படி ஒரு தலையீடு இதுவரை நடந்தது கிடையாது. அரசின் விதிகளின்படியே டெண்டர்கள் நடத்தப்படுகின்றன' என்றார்.
ஜெகநாதன் (தி.மு.க): திம்மராஜபுரம் முப்புடாதி அம்மன் கோவில் தெருவில் உடைந்து கிடக்கும் கல்பாலத்தை சரி செய்ய வேண்டும்.
ஷர்மிளா (தி.மு.க): பாளையங்கோட்டை மார்க்கெட்டில் கடைகளை அப்புறப்படுத்தும் பணி நடந்து வருகிறது. இதில் தற்காலிக கடைகள் அமைக்க நிதி ஒதுக்கீடு குளறுபடியாக உள்ளது. சிவன் கோவில் தெப்பக்குளத்தை சுற்றி அமைக்கப்பட்ட பேவர்பிளாக் சாலை மோசமாக உள்ளது. தெருவிளக்கு வசதியும் ஏற்படுத்தி தரவேண்டும்.
ரசூல் மைதீன் (ம.நே.ம.க.): மேலப்பாளையம் ஆமீன்புரம் பின்தங்கிய பகுதி ஆகும். அங்குள்ள தெருக்களை சுத்தமாக பராமரிக்க கூடுதலாக தூய்மை பணியாளர்களை நியமிக்க வேண்டும் என்றார்.
இதேபோல் மண்டல தலைவர்கள் ரேவதி பிரபு, கதீஜா இக்லாம் பாசில்லா உள்பட அனைத்து கவுன்சிலர்களும் தங்களது வார்டு பகுதிகளுக்கான கோரிக்கைகளை முன்வைத்து பேசினர்.
ரூ.300 கோடியில் சீரமைப்பு
இதற்கு மேயர் சரவணன் பதில் அளித்து பேசுகையில், ''நெல்லை மாநகரில் குடிநீர் பற்றாக்குறையை போக்கும் வகையில் அரியநாயகிபுரம் தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அதே நேரத்தில் பழமையான குடிநீர் வினியோக குழாய்களை மாற்றி விட்டு ரூ.300 கோடி செலவில் புதிய குழாய்கள் பதிக்கும் வகையில் திட்டம் தீட்டப்பட்டு அரசின் அனுமதிக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. அந்த பணியும் முடிவடைந்து விட்டால் நெல்லை மாநகர மக்களுக்கு 24 மணி நேரமும் தொடர்ந்து தண்ணீர் கிடைக்கும். தூய்மை பணியை மேம்படுத்த மேலும் 300 தூய்மை பணியாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர். அவர்கள் வார்டு வாரியாக ஒதுக்கீடு செய்து பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். அவர்களின் வருகை பயோமெட்ரிக் முறையில் பதிவு செய்யப்படும்'' என்றார்.