தென்கால் கண்மாய்கரையில் ரூ.42 கோடியில் புதிய தார்ச்சாலை மரங்கள் வெட்டி அகற்றம்
வாகன போக்குவரத்துக்காக தென்கால் கண்மாய்கரையில் ரூ.42 கோடியில் புதிய தார்ச்சாலை அமைக்கப்படுகிறது. இதற்கான முதற்கட்டமாக மரங்கள் வெட்டி அகற்றப்படுகிறது.
திருப்பரங்குன்றம்,
வாகன போக்குவரத்துக்காக தென்கால் கண்மாய்கரையில் ரூ.42 கோடியில் புதிய தார்ச்சாலை அமைக்கப்படுகிறது. இதற்கான முதற்கட்டமாக மரங்கள் வெட்டி அகற்றப்படுகிறது.
குடிநீர்-விவசாய ஆதாரம்
திருப்பரங்குன்றம் மக்களின் குடிநீர் ஆதாரமாகவும், விவசாயிகளின் வாழ்வாதாரமாகவும் தென்கால் கண்மாய் அமைந்து உள்ளது. தென்கால் கண்மாயை தூர்வாரி ஆழப்படுத்துவதோடு தண்ணீர் நிரப்ப வேண்டும். மேலும் கண்மாயின் கரையை அகலப்படுத்தி பலப்படுத்தப்பட வேண்டும் என்பது விவசாயிகளின் நீண்டநாள் கோரிக்கையாக இருந்து வருகிறது
இந்த நிலையில் 2022-2023-க்கான மானிய கோரிக்கையில் அறிவிக்கப்பட்ட திட்டங்களில் ஒன்றாக நெடுஞ்சாலைத்துறை அலகின் கீழ் ரூ.41.89 கோடியில் திருப்பரங்குன்றம் தென்கால் கண்மாய் கரையில் வாகன போக்குவரத்திற்கான புதிய வழித்தடம் அமைக்கப்படுகிறது.
அதாவது பசுமலை மூலக்கரை அருகில் இருந்து திருப்பரங்குன்றம் பை-பாஸ் ரோடு சந்திப்பு வரை 1.2 கி.மீ தூரம் 7 மீட்டர் அகலத்திற்கு தென்கால் கண்மாயில் புதிய வழித்தடமாக தார்ச்சாலை அமைக்கப்படுகிறது. மேலும் கண்மாய்கரையின் இரு புறமுமாக கரையின் நெடுகிலும் உயரமான திடமான தடுப்பு சுவர்கள் கட்டப்பட திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் கண்மாய் கரையில் புதியதாக அமைய உள்ள தார்ச்சாலையின் பக்கவாட்டின் ஒருபுறம் 3 மீட்டர் அகலத்திற்கு பொதுமக்கள் வசதிக்காக நடைபாதையும், மற்றொரு புறம் 3 மீட்டர் அகலத்திற்கு நிழல் தரும் மரக்கன்றுகள் நடவும் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் மின்விளக்கு வசதியும் செய்யப்பட உள்ளது.
முதற்கட்ட ஆயத்த பணி தொடக்கம்
இதற்காக நெடுஞ்சாலை துறை கோட்ட பொறியாளர் பிரசன்னா வெங்கடேசன், உதவி கோட்டபொறியாளர் சாருமதி ஆகியோர் மேற்பார்வையில் முதல் கட்ட ஆயத்த பணி தொடங்கியது. அதில் தென்கால் கண்மாய் கரையில் புதராக வளர்ந்துள்ள முள் செடி கொடிகள் மற்றும் மரங்களை எந்திரங்களை கொண்டு வெட்டி கரையை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து நெடுஞ்சாலை துறை அதிகாரி ஒருவர் கூறும் போது:-
திருப்பரங்குன்றம் பை-பாஸ் சாலையில் இருந்து புதியதாக தென்கால் கண்மாய்கரையில் அமைய உள்ள புதிய வழித்தட தார்ச்சாலை ஒருவழிப்பாதையாகவும், தற்போது பயன்பாட்டில் உள்ள சாலையானது மற்றொரு ஒருவழிப்பாதை ஆகவும் அமையும்.இதன் மூலம் வாகன போக்குவரத்து நெரிசல் தவிர்க்கப்பட்டு பொதுமக்களுக்கு வசதியாக அமையும். கலெக்டர் அனுமதி பெற்று தென்கால் கண்மாய் கரையில் உள்ள மரங்கள் வெட்டி அப்புறப்படுத்தப்படுகிறது.இதற்கு ஈடாக மற்றொரு இடத்தில் 6 அடி உயர மரங்கள் நடப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.