நகை பட்டறையில் 8 பவுன் நகையை திருடிய வடமாநில ஊழியர்
மணவாளக்குறிச்சி அருகே வேலைக்கு சேர்ந்த ஒரே வாரத்தில் 8 பவுன் நகையை திருடிய உரிமையாளரின் மோட்டார் சைக்கிளில் தப்பி சென்ற வாடமாநில ஊழியரை போலீசார் தேடி வருகிறார்கள்.
மணவாளக்குறிச்சி,
மணவாளக்குறிச்சி அருகே வேலைக்கு சேர்ந்த ஒரே வாரத்தில் 8 பவுன் நகையை திருடிய உரிமையாளரின் மோட்டார் சைக்கிளில் தப்பி சென்ற வாடமாநில ஊழியரை போலீசார் தேடி வருகிறார்கள்.
இந்த சம்பவம் குறித்த விவரம் வருமாறு:-
வடமாநில ஊழியர்
நாகர்கோவில் அருகே உள்ள ராமன்புதூரை சேர்ந்தவர் குமார் (வயது47). இவர் மணவாளக்குறிச்சி அருகே உள்ள கடியபட்டணத்தில் நகை பட்டறை நடத்தி வருகிறார். இவரது கடையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு மேற்கு வங்காளம் ஹவுராவை சேர்ந்த சதாம் மகன் செயப்அலி (28) என்பவர் வேலைக்கு சேர்ந்தார். அவர் குமார் வீட்டிலேயே தங்கி இருந்தார்.
தினமும் காலை இருவரும் சேர்ந்தே நாகர்கோவிலில் இருந்து கடியபட்டணத்தில் உள்ள பட்டறைக்கு வருவார்கள். மாலையில் இருவரும் சேர்ந்தே நாகர்கோவிலுக்கு செல்வார்கள்.
நகையை திருடினார்
இந்தநிலையில் நேற்று முன்தினம் மதியம் பட்டறையில் இருந்தபோது அருகில் உள்ள ஓட்டலுக்கு சென்று சாப்பிட்டு விட்டு வருவதாக செயப் அலி, குமாரிடம் கூறினார். அதற்காக குமாரிடம் இருந்த மோட்டார் சைக்கிளை கேட்டார். அவரும் ஊழியரின் பேச்சை நம்பி தனது மோட்டார் சைக்கிளை கொடுத்து அனுப்பினார்.
பின்னர் வெகுநேரமாகியும் செயப் அலி திரும்பி வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த குமார் வேலை பார்ப்பதற்கு வாங்கி வைத்திருந்த நகையை பார்த்த போது 8 பவுன் நகையை காணவில்லை. அதை செயப் அலி திருடிவிட்டு மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றது தெரிய வந்தது.
இதுகுறித்து குமார் மணவாளக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து வடமாநில ஊழியரை தேடி வருகிறார்கள்.
வேலைக்கு சேர்ந்த ஒரு வாரத்தில் நகையையும், உரிமையாளரின் மோட்டார் சைக்கிளையும் வடமாநில ஊழியர் எடுத்து சென்றது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.