ஜல்லிக்கட்டு காளைகளை திருடிய வடமாநில கும்பல் சிக்கியது
மதுரையில் ஜல்லிக்கட்டு காளைகளை வேனில் வந்து திருடிய வடமாநிலத்தை சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
மதுரையில் ஜல்லிக்கட்டு காளைகளை வேனில் வந்து திருடிய வடமாநிலத்தை சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
மாடு திருடும் கும்பல்
மதுரையில் செல்லூர், கூடல்நகர், விளாங்குடி, கரிசல்குளம், தெற்குவாசல், அலங்காநல்லூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வீடுகளில் வளர்க்கும் ஜல்லிக்கட்டு காளைகளை திருடும் கும்பல் தற்போது வலம் வருகிறது. இந்த கும்பலால் மதுரையில் இதுவரை 20-க்கும் மேற்பட்ட காளைகள் திருடப்பட்டு உள்ளன. இதுதொடர்பாக பல்வேறு போலீஸ் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
நள்ளிரவு நேரங்களில் வேனில் வரும் கும்பல் வீடுகள் முன்பு நிற்கும் மாடுகளை திருடி, வேறு மாவட்டங்களுக்கு கொண்டு சென்று விற்பனை செய்து வருவது தற்போது தெரியவந்துள்ளது. கடந்த 11-ந் தேதி இரவு எஸ்.எஸ்.காலனி, தாமஸ் காலனி பகுதியில் சரக்கு வேனில் வந்த ஒரு கும்பல் மாடுகளை திருடி செல்வதை அந்த பகுதியை சேர்ந்தவர்கள் பார்த்தனர். உடனே அவர்களை பிடிக்க முயன்றபோது அவர்கள் மின்னல் வேகத்தில் சரக்கு வேனில் தப்பினர்.
சப்-இன்ஸ்பெக்டர் காயம்
அவர்களை அந்த பகுதியை சேர்ந்தவர்கள் மோட்டார் சைக்கிள்களில் விரட்டி சென்றனர். மேலும் விளாங்குடி சோதனைச்சாவடியில் இருந்த போலீசாரை உஷார்படுத்தினர். அங்கு பாதுகாப்பிற்கு இருந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தவமணி இரும்பு தடுப்பை சாலையின் நடுவே வைத்து வாகனத்தை பிடிக்க முயன்றார். ஆனால் சரக்கு வேனில் வேகமாக வந்த கும்பல் இரும்பு தடுப்பை தள்ளிக்கொண்டு தப்பியது. இந்த இரும்பு தடுப்பு காலில் விழுந்து சப்-இன்ஸ்பெக்டர் காயம் அடைந்தார்.
இந்த சம்பவம் குறித்து கூடல்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் அந்த கும்பலை உடனடியாக பிடிக்க போலீஸ் கமிஷனர் நரேந்திரன் நாயர் உத்தரவிட்டார். துணை கமிஷனர் அரவிந்த் மேற்பார்வையில், உதவி கமிஷனர் விஜயகுமார், கூடல்புதூர் இன்ஸ்பெக்டர் மதுரை வீரன் தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர்கள் சுந்தரராஜன், முத்துராம் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.
கண்காணிப்பு கேமராக்கள்
அவர்கள் வேன் சென்ற பகுதியில் உள்ள ஒவ்வொரு கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளையும் கைப்பற்றி ஆய்வு செய்தனர். அதில் அந்த வேன் நள்ளிரவு 3 மணி அளவில் கொடைரோடு சோதனைச்சாவடியை கடந்து ஒட்டன்சத்திரம், தாராபுரம் வழியாக செல்வதை பார்த்தனர். முடிவில் தாராபுரம் அருகே கோவிந்தபுரம் என்ற ஊரில் வேன் நிற்பதை கண்டுபிடித்தனர். போலீசார் அந்த வேனில் சென்ற 5 பேரை சுற்றி வளைத்து பிடித்து விசாரித்தனர்.
அதில் அவர்கள் அரியானா மாநிலம் மேவாட் ரசூல்பூரை சேர்ந்த சாகுல் (வயது 23), சுபைர்(33), நாசர்(22), இர்பான்(26), எச்.கே.முதீன்(42) என்பதும், இவர்கள் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த சரக்கு வேனில் மாடுகளை திருடி சென்றதும் தெரியவந்தது. இவர்கள் 5 பேரையும் கைது செய்தனர். மேலும் 5 பேரை தேடி வருகிறார்கள்.
கேரளாவில் விற்பனை
அவர்களிடம் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தது. அரியானாவை சேர்ந்த இர்பான் தலைமையில் 10 பேர் கும்பல் மாடுகளை திருடி தாராபுரத்தை சேர்ந்த ஒருவரிடம் கொடுத்து விடுவார்கள். அவர் உடனே மாடுகளை கேரளாவை சேர்ந்த அலி என்பவருக்கு விற்பனை செய்து விடுவார். அவர் ஒரு மாட்டிற்கு ரூ.15 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரை தருவாராம். மாடு திருடும் ஒருவருக்கு ஒருநாள் சம்பளம் 1,500 ரூபாய். இவர்கள் நள்ளிரவு 1 மணி அளவில் நகருக்குள் வந்து மாடுகளை திருடி உடனே கேராளவிற்கு அனுப்பி விடுவார்கள்.
தாராபுரத்தை சேர்ந்த நபர்தான் இதற்கு மூளையாக செயல்பட்டு உள்ளார். இவர்தான் ஒவ்வொரு ஊரிலும் ஆட்களை வைத்து காளைகளை நள்ளிரவு நேரத்தில் காளைகளை திருடியுள்ளார். அவர் பிடிப்பட்டால்தான் முழு விவரம் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.
இவர்கள் மதுரையில்தான் 20-க்கும் மேற்பட்ட ஜல்லிக்கட்டு காளைகள் மற்றும் பசுமாடுகளை திருடி சென்றுள்ளனர். மதுரை தனிப்படை போலீசார் தொடர்ந்து 7 நாட்கள் கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து மாடு திருடும் கும்பலை பிடித்துள்ளனர். இந்த சம்பவத்தில் குற்றவாளிகளை கைது செய்த தனிப்படையினரை போலீஸ் கமிஷனர் மற்றும் அதிகாரிகள் பாராட்டினார்கள்.