வாணியம்பாடி அருகே ஓடும் ரெயிலில் இருந்து கீழே விழுந்த 'பேக்'
வாணியம்பாடி அருகே ஓடும் ரெயிலில் இருந்து கீழே விழுந்த பேக்கை உரியவரிடம் போலீசார் ஒப்படைத்தனர்.
பெங்களூருவை அடுத்த கசவான அல்லி பகுதியை சேர்ந்தவர் கோபால்வி மிஸ்ரா. இவரது மகன் ஹரிஷ்குமார் மிஸ்ரா (வயது 21), பெங்களூருவில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் பயிற்சி மாணவராக உள்ளார்.
இந்தநிலையில் அவரது உறவினர் வேலூரில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால் அவரை பார்ப்பதற்காக ஹரிஷ்குமார் மிஸ்ரா காவேரி எக்ஸ்பிரஸ் ரெயிலில் பெங்களூருவில் உள்ள கே.ஆர்.புறத்தில் இருந்து காட்பாடிக்கு வந்தார்.
ரெயிலில் அவர் ஜன்னல் ஓரமாக அமர்ந்து பயணம் செய்துள்ளார். வாணியம்பாடி ரெயில் நிலையத்தை கடந்து சென்ற போது லேப்டாப் அடங்கிய பேக் ஜன்னல் வழியாக கீழே விழுந்துள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் காட்பாடி ரெயில்வே போலீசார் உடனடியாக ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதைத் தொடர்ந்து சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் ஜெயக்குமார், சுப்ரமணி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தவறவிட்ட பேக்கை தேடினர். அப்போது வாணியம்பாடியை அடுத்த கிரிசமுத்திரம் பகுதியை சேர்ந்த பிரதாப் என்பவர் தண்டவாள பாதையில் கிடந்ததாக பேக்கை ரெயில்வே போலீசாரிடம் ஒப்படைத்தார்.
இதனையடுத்து ரெயில்வே போலீசார் பேக்கை ஒப்படைத்த வாலிபரை பாராட்டினர். பின்னர் ஹரிஷ்குமாரை அழைத்து லேப்டாப் அடங்கிய பேக்கை ஒப்படைத்தனர்.