புதுப்பொலிவுடன் காட்சி அளிக்கும் பொதிகை படகு


புதுப்பொலிவுடன் காட்சி அளிக்கும் பொதிகை படகு
x
தினத்தந்தி 14 April 2023 12:15 AM IST (Updated: 14 April 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

கடல் நடுவில் உள்ள விவேகானந்தர் மண்டபத்துக்கு இயக்க புதுப்பொலிவுடன் பொதிகை படகு காட்சி அளிக்கிறது. இந்த படகு விரைவில் பயன்பாட்டுக்கு வருகிறது.

கன்னியாகுமரி

தென்தாமரைக்குளம்:

கடல் நடுவில் உள்ள விவேகானந்தர் மண்டபத்துக்கு இயக்க புதுப்பொலிவுடன் பொதிகை படகு காட்சி அளிக்கிறது. இந்த படகு விரைவில் பயன்பாட்டுக்கு வருகிறது.

படகு போக்குவரத்து

கன்னியாகுமரியில் கடல் நடுவே அமைந்துள்ள பாறையில் சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபமும், அதன் அருகில் உள்ள மற்றொரு பாறையில் 133 அடி உயர திருவள்ளுவர் சிலையும் அமைக்கப்பட்டு உள்ளது.

இவற்றை காண தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் படகில் சென்று பார்த்து வருகிறார்கள். இதனை பார்வையிட செல்லும் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக தமிழக அரசு நிறுவனமான பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் படகு போக்குவரத்தை நடத்தி வருகிறது.

ரூ.30 லட்சத்தில் சீரமைப்பு பணி

தினமும் காலை 8 மணிக்கு தொடங்கும் படகு போக்குவரத்து மாலை 4 மணி வரை இடைவேளை இன்றி தொடர்ச்சியாக இயக்கப்பட்டு வருகிறது. இதற்காக பொதிகை, குகன், விவேகானந்தா ஆகிய 3 படகுகள் இயக்கப்படுகின்றன. இதில் பொதிகை படகு கடலில் இயக்குவதற்கான காலக்கெடு முடிவடைந்து விட்டதால் அதனை கரையேற்றி ரூ.30 லட்சம் செலவில் சீரமைக்க பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் முடிவு செய்தது.

இதைத்தொடர்ந்து பொதிகை படகு கன்னியாகுமரி பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக படகுத்துறையில் இருந்து கடந்த 3 மாதங்களுக்கு முன்பு கடல் வழியாக சின்னமுட்டம் துறைமுகத்தில் உள்ள படகு கட்டும் தளத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு அந்த படகு கரையேற்றப்பட்டு சீரமைக்கும் பணி நடந்தது.

விரைவில் வெள்ளோட்டம்

இந்த பணியில் சென்னையை சேர்ந்த 15 பேர் கொண்ட பொறியியல் வல்லுனர் குழுவினர் ஈடுபட்டனர். பராமரிக்கும் பணி 3 மாத காலம் நடந்தது. பணி முடிவடைந்ததை தொடர்ந்து பொதிகை படகு புதுப்பொலிவுடன் கடலில் இறக்கப்பட்டு சின்னமுட்டத்தில் இருந்து கடல் வழியாக கன்னியாகுமரியில் உள்ள பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக படகுத்துறைக்கு கொண்டு வரப்பட்டது. இதையடுத்து புதுப்பொலிவுடன் காட்சியளிக்கும் பொதிகை படகு விரைவில் வெள்ளோட்டம் விடப்படுகிறது.

அதன்பிறகு கடலின் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு சுற்றுலா பயணிகளை ஏற்றிச் செல்ல பயன்படுத்தப்படும் என பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.


Next Story