காஷ்மீரில் இருந்து வண்டலூர் வந்த ஒரு ஜோடி இமாலய கருங்கரடி
காஷ்மீரில் இருந்து வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு ஒரு ஜோடி இமாலய கருங்கரடி கொண்டு வரப்பட்டது.
வண்டலூர்,
சென்னையை அடுத்த வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா இந்தியாவின் மிக பெரிய மற்றும் பழமையான உயிரியல் பூங்காக்களில் ஒன்றாகும். இது வன விலங்குகளுக்கான வெற்றிகரமான இனப்பெருக்க திட்டத்தை கொண்டுள்ளது.
குறிப்பாக புலிகளை இனப்பெருக்கம் செய்வதில் வெற்றிகரமாக செயல்படுகிறது. எனவே இங்குள்ள புலிகளை பெரும்பாலும் விலங்குகள் பரிமாற்ற திட்டத்தின் மூலம் இந்தியாவில் உள்ள மற்ற உயிரியல் பூங்காவுக்கு பரிமாற்றம் செய்கி்றது. இந்த ஆண்டு ஜனவரி மாதம் முன்மொழியப்பட்ட விலங்குகள் பரிமாற்ற திட்டத்தின்படி காஷ்மீரில் உள்ள ஜம்பு உயிரியல் பூங்காவில் இருந்து ஒரு ஜோடி இமாலயன் கருங்கரடி கொண்டு வர முடிவு செய்யப்பட்டது.
இதற்கு பதில் வண்டலூர் உயிரியல் பூங்காவில் இருந்து ஒரு ஜோடி வங்கப்புலிகள் வழங்க ஒப்புக்கொள்ளப்பட்டது.
வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு...
ஜம்முவில் இருந்து சென்னை சென்டிரல் வர அந்தமான் விரைவு ரெயிலில் சிறப்பு பெட்டி இணைக்கப்பட்டு ஒரு ஜோடி கருங்கரடி கொண்டு வரப்பட்டது. பின்னர் அவை வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு கொண்டு வரப்பட்டன. வருகி்ற 15-ந்தேதியன்று திரும்பும் இதே ரெயிலில் இங்கிருந்து ஒரு ஜோடி வங்கப்புலிகள் அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது. ஜம்முவில் இருந்து சென்னைக்கு விலங்குகள் பரிமாற்ற பயணத்தில் ஜம்பு உயிரியல் பூங்கா பணியாளர்கள், வன அலுவலர்கள் மற்றும் கால்நடை உதவி டாக்டர் ஆகியோரும் வந்தனர். கொண்டு வரப்பட்ட விலங்குகளின் உடல்நிலை வண்டலூர் உயிரியல் பூங்காவிலுள்ள கால்நடை உதவி டாக்டரால் பரிசோதிக்கப்பட்டு கரடிகளை தனிமைப்படுத்தப்பட்ட தற்காலிக அறைகளில் வைக்கப்பட்டுள்ளன.
நிர்ணயிக்கப்பட்ட தனிமைப்படுத்தும் கால அவகாசம் முடிந்ததும், உயிரியல் பூங்காவில் காட்சி பகுதிக்கு விலங்குகள் மாற்றப்படும். ஜம்பு உயிரியல் பூங்காவில் புலிகள் பராமரிப்பது இதுவே முதல் முறை என்பதால், அங்குள்ள விலங்கு பராமரிப்பாளர்கள், வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா ஊழியர்களிடமிருந்து ஒரு வார காலத்திற்கு புலிகளை பராமரிப்பது குறித்த நேரடி பயிற்சியை பெறுவார்கள் வண்டலூர் பூங்கா நிர்வாகம் தெரிவித்தது.