கலெக்டரின் காலில் கைக்குழந்தையை வைக்க முயன்ற பெற்றோர்


கலெக்டரின் காலில் கைக்குழந்தையை வைக்க முயன்ற பெற்றோர்
x

டிராக்டரை மீட்டுத் தரக்கோரி கலெக்டரின் காலில் கைக்குழந்தையை வைக்க முயன்ற பெற்றோரால் பரபரப்பு ஏற்பட்டது.

வேலூர்

குறைதீர்வு கூட்டம்

வேலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு கூட்டம் கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தலைமையில் நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி முன்னிலை வகித்தார். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் புகார்கள் மற்றும் கோரிக்கை மனுக்களை அளித்தனர். பெறப்பட்ட மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு, கலெக்டர் உத்தரவிட்டார்.

முன்னதாக கூட்டத்துக்கு கலெக்டர் குமாரவேல்பாண்டியன் காரில் வந்தார். காரில் இருந்து அவர் இறங்கியபோது அங்கிருந்த ஒரு தம்பதி தாங்கள் கையில் வைத்திருந்த குழந்தையை அவரது காலில் வைக்க முயன்றனர். இதைப்பார்த்த கலெக்டர் அவரை தடுத்து நிறுத்தி விசாரணை மேற்கொண்டார்.

அப்போது குழந்தையின் தந்தை கூறியதாவது:-

எனது பெயர் சாமி (வயது 36). நான் வேலூரை அடுத்த கணியம்பாடி அருகே நஞ்சுகொண்டாபுரம் கிராமம் மேற்குகொல்லைமேடு பகுதியில் வசித்து வருகிறேன். எனது சித்தப்பா சிவப்பிரகாசம் பெயரில் வங்கியில் கடன் பெற்று டிராக்டர் வாங்கினேன்.

அந்த கடனை திரும்ப செலுத்த முடியாததால் கே.வி.குப்பத்தை சேர்ந்த ஒருவர் எனது டிராக்டரை வாங்கிக்கொள்கிறேன் என்றார். முதலில் குறைந்த தொகை என்னிடம் கொடுத்தார். மீதம் உள்ள தொகையை வங்கியில் செலுத்தி விடுவதாக கூறினார். ஆனால் டிராக்டரை வாங்கிக் கொண்டு அவர் பணத்தை கொடுக்கவில்லை. சுமார். ரூ.5 லட்சம் வரை கொடுக்க வேண்டி உள்ளது. அவர் தொடர்ந்து மோசடி செய்து வருகிறார். எனது டிராக்டரை மீட்டு தரவேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

அணைக்கட்டு தாலுகா கருங்காலி பகுதி சாமன்கொட்டாய் அருந்ததியர் காலனியை சேர்ந்த பொதுமக்கள் அளித்துள்ள மனுவில் நாங்கள் இந்த கிராமத்தில் 4 தலைமுறையாக வாழ்ந்து வருகிறோம். எங்கள் பகுதியை சேர்ந்தவர்கள் யாராவது இறந்தால் அரசு புறம்போக்கு நிலத்தில் புதைத்து வருகிறோம். அந்த இடத்தை சுடுகாடாக பயன்படுத்துகிறோம். ஆனால் அரசு அதிகாரியின் பதிவேட்டில் அந்த இடம் அரசு புறம்போக்கு நிலம் என்று உள்ளது. பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு அந்த நிலத்தை சுடுகாடு என்று வகைபடுத்தி ஈமச்சடங்குகள் செய்ய ஆழ்துளை கிணறும் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

இந்திய கம்யூனிஸ்டு கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட், விடுதலை) சார்பில் அளிக்கப்பட்டுள்ள மனுவில் வேலூர் மாநகராட்சி 58-வது வார்டுக்குட்பட்ட விஸ்வநாதன்நகர், அண்ணாநகர் ஆகிய பகுதிகளில் 90 ஏழை மக்கள் 60 ஆண்டுகளான அங்கு வசித்து வருகின்றனர். அவர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கிட போராட்டம் நடத்தப்பட்டது. தகுதி உள்ள நபர்களுக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால் இதுவரை நிலுவையில் உள்ளது. எனவே உரிய விசாரணை நடத்தி தகுதி உள்ள நபர்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கிட வேண்டும்.

உள்ளூர் விடுமுறை

பா.ஜ.க.வின் ஆன்மிக மற்றும் கோவில் மேம்பாட்டு பிரிவு சார்பில் அளிக்கப்பட்டுள்ள மனுவில் அணைக்கட்டு அடுத்த வேலங்காடு சித்தேரி பொற்கொடியம்மன் புஷ்ப ரதவிழா நாளையும் (இன்று), நாளைமறுநாளும் (நாளை) நடைபெற உள்ளது. இந்த திருவிழா மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற விழாவாகும். பல்வேறு பகுதிகளில் இருந்து குடும்பம், குடும்பமாக மக்கள் வருகின்றனர். இந்த விழாவுக்கு நாளை (புதன்கிழமை) உள்ளூர் அரசு விடுமுறை அளிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story