கூடலூரில் பூங்கா அமைக்க வேண்டும்
கூடலூரில் பூங்கா அமைக்க வேண்டும் என நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் வலியுறுத்தினர்.
கூடலூர்
கூடலூரில் பூங்கா அமைக்க வேண்டும் என நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் வலியுறுத்தினர்.
நகர சபை கூட்டம்
கூடலூர் நகராட்சி அலுவலகத்தில் உள்ள மன்ற அரங்கில் நகர சபை கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு மன்ற தலைவர் பரிமளா தலைமை தாங்கினார். ஆணையாளர் பிரான்சிஸ் சேவியர், பொறியாளர் பார்த்தசாரதி, துணைத் தலைவர் சிவராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து கூட்டத்தில் மன்ற ஒப்புதல் பெறுவதற்காக தீர்மானங்கள் வாசிக்கப்பட்டது. பின்னர் பல்வேறு விவாதங்கள் நடைபெற்றது.
கவுன்சிலர் உஸ்மான்:- ஒவ்வொரு மன்ற கூட்டத்திலும் நிறைவேற்றப்படும் தீர்மானங்களின் நகல் அடுத்த கூட்டத்தில் வழங்க வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது. ஆனால், இதுவரை வழங்கவில்லை.
அபிதா பேகம், கௌசல்யா:- வார்டு பகுதிகளில் குப்பைகள் முறையாக அகற்றுவதில்லை. இதுதொடர்பாக விளக்கம் கேட்டால் பணியாளர்கள் இல்லை என தெரிவிக்கப்படுகிறது. எனவே, குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நுழைவு கட்டணம்
வர்கீஸ்:- குப்பைகளை கொண்டு செல்வதற்கு சிறிய வாகனங்களை வாங்குவதற்கு பதிலாக மலைப்பிரதேசத்தை கருத்தில் கொண்டு மினி லாரி புதியதாக வாங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆணையாளர் பிரான்சிஸ் சேவியர்:- மினி லாரி வாங்குவதற்கு உயர் அதிகாரிகளிடம் அனுமதி பெறப்பட்டுள்ளது. இனிவரும் காலங்களில் மினி லாரி வாங்கப்படும்.
உஸ்மான்:- கூடலூர் நகரில் போக்குவரத்து நெருக்கடிக்கு தீர்வு காண புறவழிச்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் தற்போது உள்ள சாலைகளின் இருபுறமும் ஆக்கிரப்புகளை அகற்றி அகலப்படுத்த வேண்டும்.
ராஜேந்திரன்:- கூடலூரில் நடந்த கோடை விழாவில் 50-க்கும் மேற்பட்ட கடைகள் அமைக்கப்பட்டு இருந்தது. இதற்கு வாடகை வசூலிக்கப்பட்டது. இதுதவிர கோடை விழாவிற்கு வரும் பொதுமக்களிடம் நுழைவு கட்டணமாக ரூ.10 பெறப்பட்டது. இதற்கு மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். நுழைவு கட்டணம் வசூலித்ததில் தவறுகள் நடைபெற்றுள்ளது. இதுதொடர்பாக விசாரணை நடத்த வேண்டும். மேலும் வரும் காலங்களில் நகராட்சி சார்பில் கோடை விழா நடத்த வேண்டும். இந்த கருத்தை பெரும்பாலான கவுன்சிலர்கள் வரவேற்றனர்.
வருவாய் கிடைக்கும்
தொடர்ந்து நகராட்சி பகுதியில் பூங்கா அமைத்து நுழைவு கட்டணம் வசூலித்தால் நகராட்சிக்கு வருவாய் கிடைக்கும். இதன் மூலம் மக்களின் அடிப்படை வளர்ச்சி பணிகளுக்கு நிதியை பயன்படுத்தலாம் என அனைத்து கவுன்சிலர்களும் வலியுறுத்தினர். இதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ஆணையாளர் உறுதி அளித்தார். தொடர்ந்து நகராட்சி பொறியாளர் பார்த்தசாரதி பணி ஓய்வு பெறுவதால் மன்றம் சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.