பாதாள சாக்கடை பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு
நாகையில் பாதாள சாக்கடை பிரச்சினைக்கு நிரந்தர தீர்வுகாண வேண்டும் என்று நகர்மன்ற கூட்டத்தில் வலியுறுத்தினர்.
நாகையில் பாதாள சாக்கடை பிரச்சினைக்கு நிரந்தர தீர்வுகாண வேண்டும் என்று நகர்மன்ற கூட்டத்தில் வலியுறுத்தினர்.
நகர்மன்ற கூட்டம்
நாகை நகராட்சி கூட்டம் நகர்மன்ற அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு நகர்மன்ற தலைவர் மாரிமுத்து தலைமை தாங்கினார். ஆணையர் விஜய்கார்த்தி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் உறுப்பினர்கள் பேசியதாவது:-
கவிதாகிருஷ்ணமூர்த்தி (அ.தி.மு.க.):- நாகை நகராட்சி குப்பை அள்ளும் பணிகள் தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. வீடுகளில் குப்பை வாங்க வருவோர்கள் காலை 11 மணிக்கு மேல் தான் வருகின்றனர். சில நேரங்களில் நாள் ஒன்றுக்கு இவ்வளவு தான் குப்பை வாங்க முடியும் என எடையளவு நிர்ணயம் செய்து வாங்குகிறார்கள். அதற்கு மேல் குப்பைகள் வாங்க மறுக்கின்றனர். நகராட்சியில் பிறப்பு, இறப்பு சான்றிதழ் பெறுவது உட்பட அனைத்து சான்றிதழ்கள் வழங்குவதில் காலதாமதம் ஆகிறது. எனவே காலம் தாழ்த்தாமல் இந்த பணிகளை விரைந்து செய்ய வேண்டும்.
நிரந்தர தீர்வு
சுரேஷ் (சுயே):- நம்பியார் நகரில் தெரு விளக்கு வசதி ஏற்படுத்தி தர வேண்டும். அடிக்கடி வெளியேறும் பாதாள சாக்கடை கழிவுநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்.
ஞானமணி (தி.மு.க.):- 36-வது வார்டு டாட்டா நகர் பகுதியில் உள்ள பாதாள சாக்கடையின் ஆள் நுழையும் மூடி பூமிக்கு அடியில் சிறிது அளவு இறங்கி விட்டது. இதனால் பாதாள சாக்கடை நீர் முறையாக வழிந்தோட முடியாமல் ஆங்காங்கே வெளியேறி வருகிறது. அதேபோல டாட்டா நகர் பகுதிகளில் நடப்பட்டுள்ள மின் கம்பத்தில் தெருவிளக்குகளை பொருத்தி ஒளிர விட வேண்டும்.
மழைநீர் வடிகால்
பதுர் நிஷா (தி.மு.க.):- நாகூர் 2-வது வார்டு பகுதியில் கடந்த 3 மாதங்களாக ஏற்பட்டுள்ள தண்ணீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும். குஞ்சாலி மரைக்காயர் தெரு, நெல்லுக்கடை தெரு, முத்து நபீஷ கார்டன் உள்ளிட்ட பகுதிகளில் இரவு 11 மணிக்கு மேல் தெருவிளக்குகள் சரியாக எரிவதில்லை. இதனை உடனடியாக சரி செய்ய வேண்டும்.
அதேபோல நாகூர் மார்க்கெட் பகுதியில் பாதாள சாக்கடையில் இருந்து அடிக்கடி கழிவுநீர் வெளியேறுகிறது. இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதால் வணிகர்கள், தர்கா வரும் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே இதுகுறித்து நிரந்தர தீர்வு காண வேண்டும். தைகால் தெரு பகுதியில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணியினை தொடங்கி மழைக்காலத்துக்குள் முடிக்க வேண்டும்.
விரைந்து முடித்து...
கவுதமன் (அ.தி.மு.க.):- தெற்கு பால்பண்ணைச்சேரி, வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு செல்லும் சாலை மோசமாக உள்ளது. இதனை சரி செய்ய வேண்டும் என்று கேட்டால், குடிநீர் குழாய் பதிக்கும் பணி முடிவடைந்த பின்னர் சாலை அமைக்கப்படும் என்று தெரிவிக்கின்றனர்.
முக்கிய சாலையாக இருப்பதால் இதனை பயன்படுத்துவதில் வாகன ஓட்டிகள் சிரமம் அடைகின்றனர். எனவே குடிநீர் குழாய்கள் பதிக்கும் பணியினை விரைந்து முடித்து சாலையை சீரமைக்க வேண்டும்.
ஒத்துழைப்பு தர வேண்டும்
ஆணையர் விஜய் கார்த்தி:- ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் நாகை நகராட்சியில் 24 ஆயிரத்து 781 குடியிருப்புகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்படவுள்ளது. எனவே இதற்கு அனைத்து உறுப்பினர்களும் ஒத்துழைப்பு தர வேண்டும்.
செந்தில்குமார் (துணைத்தலைவர்):- 24 ஆயிரம் இணைப்பு என்பது கடந்த 2006-ம் ஆண்டு கணக்கு ஆகும். தற்போது குடிநீர் இணைப்பு அதிகம் உள்ளது. எனவே அனைவருக்கும் குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். குடிநீர் வரி விதிப்பு செய்தால் நகராட்சிக்கு வருமானம் அதிகரிக்கும். அதே நேரத்தில் குடிநீர் பற்றாக்குறையும் போக்கப்படும். இவ்வாறு கூட்டத்தில் விவாதம் நடந்தது. கூட்டத்தில் நகரமைப்பு அலுவலர் நாகை நாகராஜன், துப்புரவு ஆய்வாளர் சேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.