குப்பை கிடங்கு அமையும் இடத்துக்கு பட்டா வழங்க வேண்டும்
பேரணாம்பட்டில் குப்பை கிடங்கு அமையும் இடத்துக்கு பட்டா வழங்க நகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பேரணாம்பட்டு நகராட்சி அவசர கூட்டம் நகர மன்ற தலைவர் பிரேமா தலைமையில் நடந்தது. துணை தலைவர் ஆலியார்ஜூபேர் அஹம்மத், ஆணையாளர் சுபாஷினி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் பேரணாம்பட்டு நகராட்சியில் மக்காத குப்பைகளை கொட்டுவதற்கு குப்பை கிடங்கு அமைக்க இடம் இல்லாமல் இருந்தது. நகரில் குப்பைகள் தேங்கி வந்ததால் வருவாய் துறைக்கு சொந்தமான வீ.கோட்டா ரோட்டில் உள்ள வருவாய் துறைக்கு சொந்தமான அரசு புறம்போக்கு இடங்கள் இரு பகுதியில் தேர்வு செய்யப்பட்டன.
அந்த இடங்களுக்கு பேரணாம்பட்டு நகராட்சி பெயரில் பட்டா வழங்கிட கோரி அரசுக்கு கருத்துரு அனுப்பி வைப்பது, பேரணாம்பட்டு நகராட்சி பகுதியில் சுற்றித் திரியும் மாடுகளால் தினமும் பொதுமக்களுக்கு தொடர்ந்து பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. எனவே மாடுகள் உரிமையாளர்களுக்கு தலா ரூ.1,500 அபராதம் விதிப்பதோடு மாடுகளை ஏலம் விடுவது ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.