திருடன் என நினைத்து தொழிலாளி அடித்துக்கொலை
திருடன் என நினைத்து தொழிலாளி அடித்துக்கொலை
மங்கலம்
திருப்பூரில் புத்தாண்டு தினத்தில் திருடன் என நினைத்து கட்டிட தொழிலாளி அடித்துக் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக விசைத்தறி உரிமையாளர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
கட்டிட தொழிலாளி
விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்தவர் முத்துச்செல்வம் (வயது 35). இவருடைய மனைவி விஜயசாந்தி (32). இவர்களுக்கு கோகுல்குரு (8), ஜெயபிரதாப் (6) என 2 மகன்கள் உள்ளனர். முத்துச்செல்வம் கடந்த 1½ ஆண்டுகளாக திருப்பூர் மங்கலத்தை அடுத்த கோம்பக்காட்டுப்புதூர் பகுதியில் நண்பர்களின் அறையில் தங்கி இருந்து கட்டிட வேலைக்கு சென்று வந்தார். இந்த நிலையில் நேற்று அதிகாலை 4 மணியளவில் அறையில் இருந்து வெளியே சென்ற முத்துச்செல்வம் அதன்பின்னர் நீண்டநேரமாகியும் அறைக்கு திரும்பவில்லை.
இந்த நிலையில் விருதுநகரில் உள்ள முத்துசெல்வத்தின் மனைவி விஜயசாந்தியை காலை 6 மணிக்கு முத்துச்செல்வம் செல்போனில் இருந்து தொடர்பு கொண்டவர்கள் " உங்கள் கணவர் அதிகாலை நேரத்தில் சுற்றித்திரிந்ததால் நாங்கள் பிடித்து விசாரணை நடத்தி வருகிறோம்" என தகவல் தெரிவித்து விட்டு இணைப்பை துண்டித்து விட்டனர். இதனால் அதிர்ச்சியடைந்த விஜயசாந்தி செய்வதறியாமல் திகைத்துள்ளார். இதே போல் அறையில் உள்ள முத்துச்செல்வத்தின் நண்பர்களுக்கும் இ்ந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. உடனே அறையில் தங்கி இருந்த நண்பர்கள் முத்துச்செல்வத்தை தேடி சென்றனர். அப்போது அங்குள்ள தனியார் விசைத்தறி கூடம் அருகே ரத்த வௌ்ளத்தில் முத்துச்செல்வம் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். இது பற்றிய தகவல் அறிந்ததும் மங்கலம் போலீசாரும், முத்துச்செல்வத்தின் நண்பர்களும் அவரை மீட்டு சோமனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு முத்துச்செல்வத்தை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து முத்துச்செல்வம் உடலை மீட்டு பிரேத பரிேசாதனைக்கு திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.
விசைத்தறி உரிமையாளர் கைது
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் முத்துச்செல்வம் ரத்த வெள்ளத்தில் கிடந்த விசைத்தறி கூடம் இருந்த இடத்திற்கு சென்று விசாரித்தனர். விசாரணையில் முத்துச்செல்வம் அதிகாலை நேரத்தில் விசைத்தறி கூடம் அருகே நடந்து சென்றதாகவும், திருடன் என சந்தேகித்து தொழிற்சாலை உரிமையாளர் முத்துச்செல்வத்தை தாக்கியதில் அவர் உயிரிழந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இதையடுத்து முத்துச்செல்வத்தின் சாவுக்கு காரணமானவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முத்துச்செல்வத்தின் நண்பர்கள் தனியார் விசைத்தறி கூடம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி ெகாலையாளி விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்று உறுதி அளித்ததால் அவர்கள் கலைந்து சென்றனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து கோம்பக்காட்டூர்புதூர் பகுதியை சேர்ந்த விசைத்தறி உரிமையாளர் துரைபழனிசாமி (45), அதே பகுதியை சேர்ந்த சவுந்தரராஜன் (48) ஆகியோரை பிடித்து விசாரணை செய்தனர். .
விசாரணையில் நேற்று அதிகாலை 4 மணிக்கு விசைத்தறி உரிமையாளர் துரைபழனிசாமி வீட்டின் கதவை முத்துச்செல்வம் தட்டியதாகவும், இதனால் திருடன் என நினைத்து முத்துச்செல்வத்தை துரத்தி சென்றபோது அவர், சவுந்தரராஜன் வீட்டின் சுற்றுச்சுவர் ஏறி குதித்து உள்ளே சென்றதாகவும், அப்போது சவுந்தரராஜனும், துரைபழனிசாமியும் சேர்ந்து முத்துச்செல்வத்தை கட்டையால் தாக்கியபோது அவர் மயங்கி விட்டதால், தாங்கள் அங்கிருந்து வந்து விட்டதாகவும் தெரிவித்ததாக போலீசார் கூறினர்.
இதையடுத்து துரைபழனிசாமி மற்றும் சவுந்தரராஜன் ஆகிய 2 ேபரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
மங்கலத்தில் திருடன் என நினைத்து கட்டிட தொழிலாளி அடித்து கொலை ெசய்யப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.