பசுக்களுக்கான சினை ஊசி போடும் நபர்கள்
பசுக்களுக்கான சினை ஊசி போடும் நபர்கள்
போடிப்பட்டி,
உடுமலை பகுதியில் விவசாயிகளைத் தேடி வந்து பசுக்களுக்கான சினை ஊசி போடும் நபர்களைக் கண்காணிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கறவை மாடுகள்
உடுமலை சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயம் முக்கிய தொழிலாக உள்ளது.அதன் உபதொழிலாக கால்நடைகள் வளர்ப்பிலும் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில் பால் உற்பத்தியைக் கருத்தில் கொண்டு கறவை மாடுகள் வளர்த்து வரும் விவசாயிகளை நேரடியாக அணுகும் நபர்கள் கறவை மாடுகளுக்கு சினை ஊசி செலுத்துவதை ஒரு தொழிலாக செய்து வருகின்றனர். இதில் பல நேரங்களில் பசுக்கள் சினை பிடிப்பதில்லை என்பது விவசாயிகளின் குற்றச்சாட்டாக உள்ளது.
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-
கறவை மாடுகள் சரியான பருவத்தில் சினை பிடித்து ஆண்டுக்கு ஒரு கன்று ஈனுவது வழக்கமாகும். அவ்வாறு உரிய காலத்தில் கன்று ஈனாத போது பால் உற்பத்தி குறைந்து பராமரிப்புச் செலவுக்கு இணையாக வருவாய் ஈட்ட முடியாத நிலை ஏற்படும். தீவன விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் கடந்த காலங்களை போல் தற்போது பொலி காளைகளை வளர்ப்பதற்கு பெரும்பாலானோர் முன்வருவதில்லை. இதனால் பசுக்களுக்கு செயற்கை முறை கருத்தரிப்பையே நம்பியிருக்க வேண்டிய நிலை உள்ளது.
சினை ஊசிகளின் தரம்
அரசு கால்நடை ஆஸ்பத்திரிகளில் சினை ஊசி போடப்படுகிறது. ஆனால் அதற்கு நேரம் ஒதுக்கி, செலவு செய்து பசுக்களை கொண்டு செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் பலரும் விவசாயிகளை தேடி வரும் நபர்கள் மூலம் பசுக்களுக்கு சினை ஊசி போடுகிறார்கள்.
இதற்கு ஒருமுறைக்கு ரூ. 200 முதல் ரூ. 500 வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால் பல வேளைகளில் பசுக்கள் சினை பிடிப்பதில்லை.அப்போது பசுக்களுக்கு சத்தில்லை, சாதகமற்ற தட்ப வெப்பம் என்று ஏதேனும் ஒரு காரணத்தைச் சொல்கிறார்கள்.இதனால் விவசாயிகள் பாதிக்கப்படும் நிலை உள்ளது.
எனவே இதுபோன்று சினை ஊசி போடும் நபர்கள், அவர்கள் பயன்படுத்தும் சினை ஊசியின் தரம் உள்ளிட்டவை குறித்து கால்நடைத்துறையினர் ஆய்வு செய்ய வேண்டும்.
இவ்வாறு விவசாயிகள் கூறினர்.