உயர்மின் கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த வாலிபர்
உயர்மின் கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த வாலிபர்
திருப்பூர்
திருப்பூரில் அதிகாலையில் உயர்மின் கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த வாலிபரால் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறுப்படுவதாவது:-
வாலிபர்
திருப்பூர் டைமண்ட் தியேட்டர் அருகே ஜம்மனை ஓடையோரம் 100 அடி உயரத்தில் உயர்மின் கோபுரம் உள்ளது. இந்த கோபுரத்தில் நேற்று காலை 6 மணி அளவில் 20 வயது மதிக்க தக்க வாலிபர் ஒருவர் மேலே ஏறினார். இதை அங்கிருந்தவர்கள் பார்த்து சத்தம் போட்டு கீழே இறங்குமாறு கூறினார்கள். ஆனால் அந்த வாலிபரோ எதையும் கேட்காமல் உயர்மின் கோபுரத்தின் உச்சியை நோக்கி ஏறிக்கொண்டு இருந்தார்.
உடனடியாக திருப்பூர் தெற்கு போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்தனர். தெற்கு தீயணைப்பு வீரர்களும் அங்கு வந்தனர். மேலும் உயர்மின் கோபுரத்தில் மின்சாரமும் நிறுத்தப்பட்டது. போலீசார் அந்த வாலிபரிடம் பேச்சுக்கொடுத்தனர். ஆனால் யாராவது மேலே ஏறி வந்தால் கீழே குதித்துவிடுவதாக அந்த வாலிபர் மிரட்டினார்.
குடும்பத்தினரிடம் கோபம்
பின்னர் போலீசார் அவரிடம் பேச்சுக்கொடுத்தனர். சிறிது நேரத்தில் கோபுரத்தில் இருந்து அந்த வாலிபர் கீழே இறங்கினார். விசாரணையில் அவர் மதுரை காளவாசல் பகுதியை சேர்ந்த ரமேஷ் (வயது 22) என்பதும், இவர் திருப்பூர் பாண்டியன் நகரில் உள்ள உறவினரின் ஒர்க் ஷாப்பில் மெக்கானிக்காக வேலை செய்து வந்ததும் தெரியவந்தது. ரமேசின் தங்கை திருமணம் நேற்றுமுன்தினம் மதுரையில் நடந்துள்ளது. அங்குள்ள மண்டபத்தில் ரமேசை வைத்து விட்டு அருகில் உள்ள கோவிலுக்கு குடும்பத்தினர் சென்றுள்ளனர். தன்னை அழைத்துச்செல்லாமல் விட்டு விட்டு சென்றதால் கோபமடைந்த ரமேஷ் அங்கிருந்து திருப்பூர் புறப்பட்டு வந்து, உயர்மின் கோபுரத்தில் ஏறியதாக போலீசார் தெரிவித்தனர். உடனடியாக மின்சாரம் நிறுத்தப்பட்டதால் பெரும்விபத்து தவிர்க்கப்பட்டது.
பின்னர் ரமேசை திருப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அதன்பிறகு திருப்பூரில் உள்ள உறவினரை அழைத்து அவர்களுடன் ரமேசை போலீசார் அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் திருப்பூரில் பரபரப்பு ஏற்பட்டது.