பஸ்சில் அடிபட்டு முதியவர் பலி


பஸ்சில் அடிபட்டு முதியவர் பலி
x

பஸ்சில் அடிபட்டு முதியவர் பலி

திருப்பூர்

திருப்பூர்

திருப்பூரில் நண்பர் இறந்த சோகத்தில் இருந்த முதியவர் பஸ்சில் அடிபட்டு பலியானார். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

பஸ் மோதி முதியவர் சாவு

திருப்பூர் ஊத்துக்குளி ரோடு மண்ணரையை சேர்ந்தவர் சுப்பிரமணியம் (வயது 74). இவர் திருப்பூர் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள ஓட்டலில் காசாளராக பணியாற்றி வந்தார். இவர் தினமும் மண்ணரை பகுதியில் நடைபயிற்சிக்கு செல்வது வழக்கம். நேற்று காலை வழக்கம் போல் நடைபயிற்சிக்கு சென்றவர் காலை 7¼ மணி அளவில் பாரப்பாளையம் பஸ் நிறுத்தம் அருகே ரோட்டில் சென்றபோது, திருப்பூரில் இருந்து ஈரோடு சென்ற தனியார் பஸ் மோதியதில் சம்பவ இடத்திலேயே பலியானார்.

இதுகுறித்து திருப்பூர் வடக்கு போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். தனியார் பஸ் முன்புறம் பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள். இதில் சாலையோரம் நடந்து சென்ற சுப்பிரமணியம் திடீரென்று ரோட்டை கடக்கும்போது பஸ் முன் கீழே விழுந்ததில் அவர் மீது பஸ் ஏறியது தெரியவந்தது.

நண்பர் மரணத்தால் சோகம்

மேலும் விசாரணையில், சுப்பிரமணியம் தனது நெருங்கிய நண்பரான, பாரப்பாளையத்தை சேர்ந்த சுப்பிரமணியத்துடன் தினமும் நடைபயிற்சிக்கு செல்வார். கடந்த வாரம் பாரப்பாளையம் சுப்பிரமணியம் மாரடைப்பு காரணமாக இறந்தார். இதனால் சுப்பிரமணியம் மனம் உடைந்து சோகமாக இருந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் நடைபயிற்சிக்கு சென்றவர், மனம் உடைந்து பஸ் முன் படுத்து தற்கொலை செய்தாரா? இல்லை கால் தடுமாறி கீழே விழுந்தபோது பஸ் ஏறியதா? என்று தெரியவில்லை.

இருப்பினும் வடக்கு போலீசார் விபத்தில் மரணம் ஏற்பட்டதாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Next Story