வீட்டின் சுற்றுச்சுவரை இடித்த தகராறில் ஒருவர் கைது
ஜோலார்பேட்டை அருகே வீட்டின் சுற்றுச்சுவரை இடித்த தகராறில் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
திருப்பத்தூர் மாவட்டம் பழைய ஜோலார்பேட்டை பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 60). இவருக்கு வக்கணம்பட்டியில் உள்ள வி.டி.கோவிந்தசாமி தெரு பகுதியில் இடம் உள்ளது. இங்குள்ள இடத்தில் கடந்த 15 வருடங்களுக்கு முன்பு அதேப்பகுதியில் வசிக்கும் திம்மராயன் (45) என்பவருக்கு வீட்டுமனையாக விற்றுள்ளார். பின்னர் திம்மராயன் வாங்கிய இடத்தில் இரண்டு சென்ட் இடம் குறைவாக இருப்பதாக விஜயகுமாரிடம் கேட்டு அடிக்கடி தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் கடந்த 3-ந்் தேதி விஜயகுமார் என்பவருக்கு சொந்தமான பழைய வீட்டின் சுற்றுச்சுவர் கட்டிடத்தை திம்மராயன் மகன் பரத் (22) என்பவர் இடித்ததாக கூறப்படுகிறது. இதை அறிந்த விஜயகுமார் தட்டிக்கேட்டுள்ளார். இதில் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, ஆத்திரமடைந்த திம்மராயன் மற்றும் இவரது மகன் பரத், திம்மராயன் மனைவி சத்யா (40) ஆகியோர் விஜயகுமாரின் தலை மீது கல்லால் தாக்கியுள்ளனர்.
இது குறித்து ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்தில் விஜயகுமார் கொடுத்த புகாரின் பேரில், திம்மராயன், இவரது மனைவி சத்யா மற்றும் மகன் பரத் ஆகிய 3 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து, திமராயனை கைது செய்தனர்.