புதுப்பேட்டை அருகே நண்பரை பீா்பாட்டிலால் தாக்கியவருக்கு வலைவீச்சு
புதுப்பேட்டை அருகே நண்பரை பீா்பாட்டிலால் தாக்கியவரை போலீசாா் வலைவீசி தேடி வருகின்றனா்.
புதுப்பேட்டை,
புதுப்பேட்டை அருகே உள்ள சிறுவத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் சங்கர் மகன் மோகன் (வயது 29). இவர் காஞ்சீபுரம் பகுதியில் உள்ள இறைச்சி கடையில் ஊழியராக வேலை பாா்த்து வருகிறார். இந்த நிலையில் விடுமுறையையொட்டி ஊருக்கு வந்திருந்த மோகன் அதே பகுதியை சேர்ந்த தனது நண்பர் கிஷோர் (26) என்பவருடன் ஈஸ்வரன் கோவில் அருகில் மது அருந்த சென்றார். அப்போது இருவருக்கும் இடையே திடீரென தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த கிஷோர் அருகில் இருந்த பீர் பாட்டிலை எடுத்து மோகன் தலையில் தாக்கி விட்டு தப்பி சென்றார். இதில் காயமடைந்த மோகனை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்த புகாரின்பேரில் கிஷோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை வலைவீசி தேடி வருகின்றனர்.