போலியாக 300 சிம்கார்டுகள் வாங்கி மோசடி கும்பலுக்கு வழங்கியவர் கைது
அடையாள அட்டை, புகைப்படத்தை தவறாக பயன்படுத்தி போலியாக 300 சிம்கார்டுகள் வாங்கி மோசடி கும்பலுக்கு வழங்கியவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து செல்போன், விரல்ரேகை பதிவு செய்யும் கருவி பறிமுதல் செய்யப்பட்டது.
அடையாள அட்டை, புகைப்படத்தை தவறாக பயன்படுத்தி போலியாக 300 சிம்கார்டுகள் வாங்கி மோசடி கும்பலுக்கு வழங்கியவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து செல்போன், விரல்ரேகை பதிவு செய்யும் கருவி பறிமுதல் செய்யப்பட்டது.
மோசடி
நெல்லை மாவட்டம் தாழையூத்து அருகே கீழ தென்கலம் பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி ஒருவர் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தெருவில் சோப்பு விற்ற நபர்களிடம் சோப்பு வாங்கி உள்ளார். அப்போது சோப்பு விற்றவர்கள் குலுக்கல் முறையில் பரிசு கொடுப்போம் என்று கூறி பெயர், முகவரி மற்றும் தொலைபேசி எண்ணை பெற்று சென்றனர்.
சில நாட்கள் கழித்து கம்பெனியில் இருந்து மேனேஜர் பேசுவதாக கூறி குலுக்கல் முறையில் தங்கக்காசு, டி.வி மற்றும் மொபட் பரிசு விழுந்திருப்பதாக கூறினார். பரிசு பொருளை அனுப்புவதற்காக வரி கட்ட வேண்டும் என்று கூறி ரூ.36,550 பெற்றுக் கொண்டு பரிசுப்பொருள் அனுப்பாமல் ஏமாற்றி விட்டனர்.
இந்த மோசடி குறித்து பாதிக்கப்பட்ட தொழிலாளி நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணனிடம் புகார் அளித்தார்.
ேபாலி சிம்கார்டு
அவரது உத்தரவுப்படி சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தொழில்நுட்ப உதவியுடன் விசாரணை நடத்தி, மோசடியில் ஈடுபட்ட தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பகுதியை சேர்ந்த காளீஸ்வரன், இசக்கிமுத்து மற்றும் அய்யனார் ஆகியோரை கடந்த ஜனவரி மாதம் கைது செய்தனர்.
இவர்களுக்கு போலியான ஆவணங்கள் மூலம் சிம் கார்டுகள் பெற்று கொடுத்ததாக செல்போன் கடை நடத்தி வரும் கடையநல்லூர் கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்த தங்கராஜ் (43) என்பவரை கடந்த 30-ந்தேதி கைது செய்தனர். மேலும் இந்த மோசடியில் பல செல்போன் கடைக்காரர்களுக்கு தொடர்பு இருப்பதும் தெரிய வந்துள்ளது.
மேலும் ஒருவர் கைது
மேலும் இது தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் தொழில்நுட்ப உதவியுடன் விசாரணை நடத்தியதில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.
திண்டுக்கல் மாவட்டம் பழனி பாலசமுத்திரம் பகுதியை சேர்ந்த கருப்பையா (37) என்பவர், ஆங்காங்கே தற்காலிக குடை நிழல்கடை அமைத்து சிம் கார்டு விற்பனை செய்து வந்துள்ளார்.
அவர் தன்னிடம் சிம் கார்டு வாங்க வரும் பொதுமக்களின் அடையாள அட்டை மற்றும் புகைப்படத்தை தவறாக பயன்படுத்தி போலியாக 300 சிம் கார்டுகள் பெற்று, அதை அதிக விலைக்கு மோசடி செய்யும் கும்பலுக்கு வழங்கியதும் தெரியவந்தது.
போலியான ஆவணங்கள் மூலம் இவ்வாறு சிம் கார்டுகள் பெற்று விற்பனை செய்துள்ளார்.
இதையடுத்து கருப்பையாவை போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர். அவரிடம் இருந்து 1 செல்போன், 2 சிம் கார்டுகள் மற்றும் சிம் வாங்குவதற்காக விரல் ரேகை பதிவு செய்யும் கருவி ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இந்த மோசடி வழக்கு தொடர்பாக இதுவரை 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
புகார் அளிக்கலாம்
பொதுமக்கள் சைபர் க்ரைம் தொடர்பாக புகார் செய்ய 1930 என்ற இலவச எண்ணை தொடர்பு கொள்ளலாம். www.cybercrime.gov.in/ என்ற இணையதளத்தில் புகார் பதிவு செய்ய வேண்டும் என்று நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் தெரிவித்துள்ளார்.