ஆத்தூரில் ரூ.50 லட்சம் கேட்டு டாக்டருக்கு மிரட்டல் விடுத்தவர் கைது


ஆத்தூரில்   ரூ.50 லட்சம் கேட்டு டாக்டருக்கு மிரட்டல் விடுத்தவர் கைது
x

ஆத்தூரில் ரூ.50 லட்சம் கேட்டு டாக்டருக்கு மிரட்டல் விடுத்தவர் கைது செய்யப்பட்டார்.

சேலம்

ஆத்தூர், செப்.25-

ஆத்தூரில் ரூ.50 லட்சம் கேட்டு டாக்டருக்கு மிரட்டல் விடுத்தவர் கைது செய்யப்பட்டார்.

டாக்டருக்கு மிரட்டல்

ஆத்தூர் உடையார்பாளையம் சடகோபன் தெருவில் ஆஸ்பத்திரி நடத்தி வருபவர் டாக்டர் கோவிந்தராஜ். இவர் சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீ அபினவிடம் ஒரு புகார் மனு அளித்தார்.

புகாரில் அவர் கூறியிருப்பதாவது:-

ஆத்தூர் அருகே உள்ள அப்பமசமுத்திரத்தை சேர்ந்த ராஜேந்திரன் (வயது 35) என்பவர் தான் ஒரு பத்திரிகை நிருபர் எனவும், நீங்கள் கட்டியுள்ள கட்டிடம் அரசு விதிமுறையை மீறி உரிய வரைமுறை இல்லாமல் உங்கள் ஆஸ்பத்திரி கட்டப்பட்டுள்ளது. இது குறித்து ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்து கட்டிடத்தை இடிக்க ஏற்பாடு செய்வேன். அப்படி செய்யாமல் இருக்க வேண்டும் என்றால் எனக்கு ரூ.50 லட்சம் பணம் தர வேண்டும் என போன் மூலம் மிரட்டல் விடுத்தார்.

அவருக்கு உடந்தையாக அவரது நண்பர் நவீன் என்பவரும் போன் மூலம் பலமுறை ரூ.50 லட்சம் கேட்டுள்ளார். அப்போது அவர் பணத்தை தரவில்லை என்றால் ஆஸ்பத்திரிக்கு ஆட்களை திரட்டி வந்து அடித்து நொறுக்கி விடுவேன். ஆஸ்பத்திரி அங்கு இருக்காது எனக்கூறி போன் மூலம் தொடர்ந்து மிரட்டல் விடுத்த வண்ணம் உள்ளனர். இந்த நபர்கள் மீது நடவடிக்கை எடுத்து எனது உயிருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்.

இவ்வாறு அந்த புகாரில் குறிப்பிட்டு இருந்தார்.

கைது

இந்த புகார் குறித்து, மாவட்ட குற்றப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் இளமுருகன் வழக்குப்பதிவு செய்து விசாரித்தார். இதைத்தொடர்ந்து நேற்று தனிப்படை போலீசார் ராஜேந்திரனை கைது செய்தனர். அவரது நண்பர் நவீனை தேடி வருகிறார்கள்.

ஆத்தூர் பகுதியில் ராஜேந்திரன் டிப்-டாப்பாக பளிச்சென்று உடையில் சுற்றிக்கொண்டு, தான் ஒரு என்ஜினீயர் என்றும், மற்றும் சிலரிடம் தான் விவசாய பட்டதாரி என்றும், வேறு சிலரிடம் நான் பத்திரிகையாளர் என்றும் கூறி பலரை மிரட்டி பணம் வசூல் செய்தது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story