உடலில் மண்எண்ணெய் ஊற்றிக்கொண்ட நபரால் பரபரப்பு
மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முன்பு தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றிக்கொண்ட நபரால் பரபரப்பு ஏற்பட்டது.
மண் எண்ணெய் ஊற்றினார்
வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு ஏராளமான பொதுமக்கள் மனு அளிக்க வருகின்றனர். நுழைவு வாயில் பகுதியில் போலீசார் பொதுமக்களிடம் விசாரணை மேற்கொண்டு உள்ளே அனுப்புவார்கள். அதன்படி நேற்று மதியம் நுழைவு வாயில் அருகே வாலிபர் ஒருவர் தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றிக்கொண்டே நடந்து வந்தார்.
அதைப்பார்த்த போலீசார் ஓடிச் சென்று பாட்டிலை தட்டி விட்டனர். பின்னர் அவரது உடலில் தண்ணீரை ஊற்றி ஆசுவாசப்படுத்தினர். தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அதில் அவர் அணைக்கட்டு தார்வழியை சேர்ந்த ஜெயசுரேஷ் என்பது தெரியவந்தது.
பணப்பிரச்சினை
இதுகுறித்து போலீசார் கூறுகையில், ஜெயசுரேஷ் அவருக்கு தெரிந்தவரிடம் ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் பணம் கொடுத்ததாக தெரிகிறது. பணம் பெற்றுக்கொண்ட நபர் திருப்பி கொடுக்கவில்லை என்பதும் பணப்பிரச்சினை தொடர்பாக மண்எண்ணெய் ஊற்றிக்கொண்டதும் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது. ஜெயசுரேஷை அணைக்கட்டு போலீஸ் நிலையத்துக்கு அனுப்பி வைத்துள்ளோம் என்றனர். இந்த சம்பவம் அங்கு சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.