பிரபல கம்பெனி பெயரில் போலி பெயிண்டு விற்றவர் கைது
வாணியம்பாடியில் பிரபல கம்பெனி பெயரில் போலி பெயிண்டு விற்றவர் கைது செய்யப்பட்டார்.
வாணியம்பாடி, ஆலங்காயம், வடசேரி ஆம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் பிரபல பெயிண்டு நிறுவனத்தின் பெயரில் போலி பெயிண்டுகள் விற்பனை செய்யப்படுவதாக அதன் தலைமை அலுவலகமான டெல்லிக்கு தொடர்ந்து வாடிக்கையாளர்கள் புகார்கள் அனுப்பி வந்தனர். அதன் அடிப்படையில் டெல்லியில் இருந்து வந்த சிறப்பு குழுவினர் மூன்று இடங்களில் சோதனை நடத்தினர்.
அதில் வாணியம்பாடி பெருமாள்பேட்டை கூட்ரோடு பகுதியில் ஒரு கடையிலும், ஆலங்காயத்தில் ஒரு கடையிலும், வடசேரி பகுதியில் ஒரு கடையிலும் வாடிக்கையாளர்கள் போல சென்று பெயிண்டு டின்களை விலைக்கு வாங்கி சோதனை செய்ததில் அவை முற்றிலும் போலியாக தயாரிக்கப்பட்டது என கண்டுபிடிக்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து பெயிண்டு கம்ெபனி பொது மேலாளர் சுந்தரம் வாணியம்பாடி டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் பெயிண்டு கடைகளுக்கு சென்று அங்கு இருந்து 50-க்கும் மேற்பட்ட போலி பெயிண்டு டப்பாக்களை பறிமுதல் செய்தனர். மேலும் இது தொடர்பாக வாணியம்பாடி நேதாஜிநகர் பகுதியை சேர்ந்த சக்கரவர்த்தி (வயது 40) என்பவரை கைது செய்தனர்.
தொடர்ந்து போலி பெயிண்டு எங்கிருந்து இப்பகுதிக்கு சப்ளை செய்யப்படுகிறது என்றும், திருப்பத்தூர் மாவட்டத்தில் எங்கெங்கு இந்த பெயிண்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது எனவும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.