தனியார் ஆம்புலன்ஸ் டிரைவர்களுக்கு தனி நலவாரியம் அமைக்க வேண்டும் மக்கள் குறைதீர் கூட்டத்தில் மனு


தனியார் ஆம்புலன்ஸ் டிரைவர்களுக்கு தனி நலவாரியம் அமைக்க வேண்டும் மக்கள் குறைதீர் கூட்டத்தில் மனு
x

தனியார் ஆம்புலன்ஸ் டிரைவர்களுக்கு தனி நலவாரியம் அமைக்க வேண்டும் என்று மக்கள் குறைதீர் கூட்டத்தில் மனு அளிக்கப்பட்டது.

திருச்சி

தனியார் ஆம்புலன்ஸ் டிரைவர்களுக்கு தனி நலவாரியம் அமைக்க வேண்டும் என்று மக்கள் குறைதீர் கூட்டத்தில் மனு அளிக்கப்பட்டது.

தனி நலவாரியம்

திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறை தீர் கூட்டம் கலெக்டர் பிரதீப் குமார் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் பலர் மனு அளித்தனர்.

தமிழ்நாடு தனியார் ஆம்புலன்ஸ் டிரைவர்கள் மற்றும் உரிமையாளர்கள் சங்க மாநில செயலாளர் முகமது இலியாஸ் கொடுத்த மனுவில், தனியார் ஆம்புலன்ஸ் டிரைவர்கள் மற்றும் உரிமையாளர்களுக்கு தனியாக நலவாரியம் அமைக்க வேண்டும். மேலும் எங்களது உரிமைகளை பாதுகாக்க குழு காப்பீடு உள்ளிட்ட நலத்திட்டங்களை செயல்படுத்த தமிழக அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார். ஜனநாயக சமூக நல கூட்டமைப்பு மாவட்ட தலைவர் முத்துக்குமார் கொடுத்த மனுவில், திருச்சி பழைய பால்பண்ணை தஞ்சை ரோடு அருகே உள்ள பாருக்கு வரும் மது பிரியர்கள் தங்களது இரு சக்கர வாகனங்களை அந்த சாலையோரத்தில் ஆங்காங்கே நிறுத்தி விட்டு செல்கின்றனர். அதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே அந்த பாரை உடனடியாக அகற்ற வேண்டும் என்று கூறியுள்ளார்.

நிரந்தர பட்டா

மண்ணச்சநல்லூர் வடக்கு காமராஜர் காலனி தெருவை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில், திருச்சி மண்ணச்சநல்லூர் மேலசீதேவிமங்கள கிராம பகுதியில் 32 குடும்பங்கள் 35 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகிறோம். இந்தப் பகுதியில் நத்தம் நிலவரித் திட்டத்தின் படி தற்காலிக பட்டா வழங்கப்பட்டது. இது நாள் வரை எங்களுக்கு நிரந்தரப்பட்டா வழங்கப்படவில்லை. எனவே எங்களுக்கு நிரந்தரப்பட்டா வழங்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.

திருச்சி மாநகராட்சி 49-வது வார்டு முடுக்குப்பட்டி பொதுமக்கள் கொடுத்த மனுவில், எங்கள் பகுதியில் அரசு புறம்போக்கு நிலத்தில் 110 வருடங்களாக 4-வது தலைமுறையாக வீடு கட்டி வசித்து வருகிறோம். தற்போது ரெயில்வே நிர்வாகம் இந்த இடம் தெற்கு ரெயில்வேக்கு சொந்தமானது என்று கூறி எங்களது வீடுகளை அப்புறப்படுத்தும் நோக்கத்தில் நோட்டீஸ் கொடுத்து வருகிறது. எனவே ரெயில்வே உத்தரவை தடுக்க கோரியும் நீண்ட நாட்களாக அரசு புறம்போக்கு நிலத்தில் குடியிருக்கும் எங்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.

மிரட்டல்

திருச்சி காந்தி மார்க்கெட் தாராநல்லூர் பகுதியை சேர்ந்த புனிதா கொடுத்த மனுவில், எனது பெயரில் உள்ள சொத்தை அபகரிப்பதற்காக எனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து அதனை வீடியோ எடுத்து இணையதளத்தில் பரப்பி விடுவதாக மிரட்டல் வருகிறது. இந்த சம்பவம் குறித்து காந்தி மார்க்கெட் போலீஸ் நிலையத்தில் பல முறை புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

மலையாளியை நியமிக்க கோரிக்கை

தமிழ்நாடு ஷெட்யூல்டு டிரைப் மலையாளி பேரவை சார்பில் கொடுத்த மனுவில், துறையூர் தாலுகா வண்ணாடு, கோம்பை, தென்பரநாடு உள்ளிட்ட பகுதியில் மலையாளிகள் வசித்து வருகின்றனர். இங்கு கிராமஉதவியாளர் மலையாளி அல்லாதவர் பணி செய்து வருகிறார். ஆகையால் எங்கள் கிராமத்திற்கு மலையாளிகளுக்கு முன்னுரிமை அளித்து மலையாளிகளை நியமிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளனர்.

441 மனுக்கள்

கூட்டத்தில், சாதிச் சான்றுகள், இதரச் சான்றுகள், குடும்ப அட்டை, முதியோர் உதவித் தொகை, நலத் திட்ட உதவிகள், அடிப்படை வசதிகள், திருமண உதவித் தொகை, பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்ட உதவிகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்களிடமிருந்து 441 மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார். கூட்டத்தில், திருச்சி மாவட்டத்தில், 9 சட்டமன்ற தொகுதிகளில் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைக்கும் பணியில் 100 சதவீதம் முடித்த 35 வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட கலெக்டர் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.


Next Story