ஆதிச்சநல்லூர் அருகே மனித எலும்பு துண்டுகள் குவியலாக கிடைத்ததால் பரபரப்பு
ஆதிச்சநல்லூர் அருகே மனித எலும்பு துண்டுகள் குவியலாக கிடைத்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஸ்ரீவைகுண்டம்:
ஆதிச்சநல்லூர் அருகே சாலை அமைக்க தோண்டிய பள்ளத்தில் பழங்கால மண்பானை ஓடுகள், மனித எலும்பு துண்டுகள் குவியலாக கிடைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. எனவே அப்பகுதியை அகழாய்வு செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மனித எலும்பு துண்டுகள்
பண்டைய தமிழர்களின் நாகரிக தொட்டிலாக விளங்கும் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே ஆதிச்சநல்லூரில் மேற்கொள்ளப்படும் அகழாய்வில் ஏராளமான பழங்கால முதுமக்கள் தாழிகள், மண்பாண்ட பொருட்கள் கண்டறியப்பட்டன.
இந்த நிலையில் ஆதிச்சநல்லூரை அடுத்த கொங்கராயகுறிச்சி வழியாக திருச்செந்தூர்- நெல்லை இடையிலான 4 வழிச்சாலை பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக கொங்கராயகுறிச்சியில் புதிய சாலை அமைப்பதற்காக அங்குள்ள வாய்க்கால் நீரோட்டத்தை மாற்றி அமைக்கும் வகையில் பள்ளம் தோண்டப்பட்டது. அப்போது ஏராளமான பழங்கால மண்பானை ஓடுகள் மற்றும் மனித எலும்பு துண்டுகள் குவியல் குவியலாக கிடைத்தன. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதை ஏராளமான மக்கள் பார்த்து சென்றனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:-
அகழாய்வு செய்ய கோரிக்கை...
ஆதிச்சநல்லூர் அருகில் தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ள ஊர்களில் தொடர்ந்து பழங்கால பொருட்கள் கண்டறியப்பட்டு வருகின்றன. பழங்காலத்தில் முதுகோனூர் என்று அழைக்கப்பட்ட கொங்கராயகுறிச்சி தாழி, திரடு பகுதிகளில் ஏற்கனவே பழங்கால பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன. இங்குள்ள 50 அடி உயரமுள்ள மணல் திரட்டில் பழமைவாய்ந்த திருவாளி பெருமாள், சுயம்பு பத்திரகாளி அம்மன் கோவில் உள்ளது.
இப்பகுதியானது முதுமக்கள் வாழ்விட பகுதிகளாக இருக்கலாம். இங்கு தற்போது பழங்கால மக்களின் முதுகெலும்பு, கால் மூட்டெலும்பு போன்றவை அதிகளவில் கிடைத்துள்ளன. எனவே இப்பகுதியை பாதுகாத்து அகழாய்வு ெசய்ய வேண்டும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.