சுடுகாட்டுக்கு இடம் ஏற்படுத்தி தரவேண்டும்
காக்காதோப்பு கிராமத்தில் சுடுகாட்டுக்கு இடம் ஏற்படுத்தி தரவேண்டும் எனற குடியாத்தத்தில் நடந்த ஜமாபந்தியில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
சுடுகாட்டுக்கு இடம்
குடியாத்தம் தாலுகா அலுவலகத்தில் கடந்த 3 நாட்களாக ஜமாபந்தி நடைபெற்றது. குடியாத்தம் உதவி கலெக்டர் எம்.வெங்கட்ராமன் தலைமையில் நடைபெற்ற ஜமாபந்தியின் 3-வது நாளான நேற்று மேல்முட்டுக்கூர் ஊராட்சி மன்ற தலைவர் சுந்தர், ஒன்றியக்குழு உறுப்பினர் செல்விசிவக்குமார் உள்ளிட்ட கிராம மக்கள் உதவி கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
அந்த மனுவில் மேல்முட்டுக்கூர் ஊராட்சி காக்காதோப்பு கிராமத்தில் சுமார் 700 குடும்பங்கள் வசிக்கின்றனர். இங்கு பொதுப்பணித்துறைக்கு சொந்தமான நீர் நிலையில் சுடுகாடு இருந்தது. கடந்த மூன்று ஆண்டுகளாக தொடர்ந்து நீர்வரத்து இருப்பதால் அங்கு உடல்களை புதைக்க இயலவில்லை. எனவே எங்கள் கிராமத்திற்கு நிரந்தரமாக சமத்துவ சுடுகாட்டிற்கு இடவசதி ஏற்படுத்தித் தர வேண்டும் என கூறியிருந்தனர்.
எஸ்.டி. சாதி சான்று
பாக்கம் ஊராட்சி நரிக்குறவர் காலனி லட்சுமிநகரை சேர்ந்தவர் நரிக்குறவர் கார்த்திக். இவரது மகன் அருணாச்சலம் குடியாத்தத்தில் உள்ள பள்ளியில் பிளஸ்-2 படித்து தேர்ச்சி பெற்று, குடியாத்தம் அரசினர் திருமகள் ஆலைக் கல்லூரியில் சேர உள்ளார். நரிக்குறவர்களை மத்திய அரசு எஸ்.டி. சாதி பட்டியலில் சேர்த்துள்ளதால் தனது மகன் அருணாச்சலம் கல்லூரியில் சேர உடனடியாக எஸ்.டி. சாதி சான்று வழங்குமாறு மனு அளித்தார். மனுவைப் பெற்றுக் கொண்ட உதவி கலெக்டர் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.
ஆக்கிரமிப்பு
அதேபோல் விவசாயிகள் சங்க ஒன்றிய செயலாளர் பழனிவேல் அளித்த மனுவில் கூடநகரம் ஏரிவரத்து கால்வாய் மற்றும் கிளை கால்வாய் பகுதியில் சிங்கல்பாடி மற்றும் உள்ளி ஊராட்சியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி சேதம் அடைந்த பகுதிகளில் கான்கிரீட் கரை ஏற்படுத்தித்தர வேண்டும், சிங்கல்பாடி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளுக்கு மயான வசதி, காரியமேடை ஏற்படுத்தி தரவேண்டும். சிங்கல்பாடி ஊராட்சி பகுதியில் காவல்துறை சார்பில் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கவேண்டும், சிங்கல்பாடி வருவாய் கிராமத்தில் கிராம உதவியாளராக பணிபுரிந்தவர் பதவி உயர்வு பெற்று சென்று 5 ஆண்டுகள் ஆகியும் பணியிடம் காலியாக உள்ளதால் பொதுமக்கள் மற்றும் மாணவர்கள், விவசாயிகள், மாற்றுத்திறனாளிகள் வருவாய்த்துறை மற்றும் அரசு சேவைகளை பெறுவதில் பெரும் சிரமம் உள்ளது. எனவே உடனடியாக கிராம உதவியாளர் நியமிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.