மரங்களை அகற்றி நிலம் சீரமைக்கப்பட்ட இடத்தில் கூட்டரங்கம் அமைக்க திட்டம்


மரங்களை அகற்றி நிலம் சீரமைக்கப்பட்ட இடத்தில் கூட்டரங்கம் அமைக்க திட்டம்
x

மரங்களை அகற்றி நிலம் சீரமைக்கப்பட்ட இடத்தில் கூட்டரங்கம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

திருச்சி

மரங்கள் வெட்டி அகற்றம்

திருச்சி மாவட்ட நிர்வாகம் சார்பில் வருகிற 14-ந் தேதி பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடைபெற உள்ளது. இதையொட்டி திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்புறம் உள்ள இடத்தில் இருந்த மரங்கள் அகற்றப்பட்டு, பாறைகளை உடைத்து நிலத்தை சமன் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக பொக்லைன் எந்திரங்கள் மூலம் தீவிரமாக பணிகள் நடந்து வருகின்றன. அங்கிருந்த 13 பெரிய மரங்கள் வேரோடு அகற்றப்பட்டது. இதனால் இயற்கை ஆர்வலர்கள் வேதனை தெரிவித்தனர். இந்நிலையில் அந்த மரங்கள் கலெக்டர் அலுவலகத்தின் பின்புறம் நடப்பட்டுள்ளது.

அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா முடிந்தபிறகு, மரங்கள் அகற்றப்பட்டு நிலம் சீரமைக்கப்பட்ட அந்த இடத்தில் பிரமாண்ட கூட்டரங்கம் (ஆடிட்டோரியம்) கட்டுவதற்கு மாவட்ட நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. வழக்கமாக மாவட்ட நிர்வாகம் சார்பில் நடைபெறும் அரசு நிகழ்ச்சிகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாக்கள் பெரும்பாலும் தனியார் மண்டபங்களிலோ அல்லது திருச்சி கலையரங்க மண்டபத்திலோ தான் நடத்தப்படும்.

பிரமாண்ட கூட்டரங்கம்

இந்தநிலையில் அரசு தொடர்பான நிகழ்ச்சிகள் நடத்துவதற்காக திருச்சி கலெக்டர் அலுவலக வளாகத்தினுள் 4 ஆயிரம் பேர் அமரக்கூடிய வகையில் பிரமாண்ட கூட்டரங்கம் (ஆடிட்டோரியம்) கட்டுவதற்காக வருவாய்த்துறை இடம் ஒதுக்கி உள்ளது. வருகிற 14-ந் தேதி அங்கு அமைக்கப்படும் தற்காலிக பந்தலில் அரசு நிகழ்ச்சி முடிந்தபின், கூட்டரங்கம் கட்டுவதற்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட உள்ளது.

இது குறித்து கலெக்டர் அலுவலக அதிகாரிகள் கூறும்போது, அரசு நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு கூட்டரங்கம் ஒன்று கலெக்டர் அலுவலக வளாகத்தில் கட்டப்பட உள்ளது. அரசு நிகழ்ச்சிகள், பெரிய அளவிலான ஆய்வுக்கூட்டங்கள் அந்த அரங்கில் நடத்தப்படும். கூட்டங்கள் இல்லாத நாட்களில் ஞாயிற்றுக்கிழமை மட்டும் தனியார் நிகழ்ச்சிகள் நடத்த குறைந்த கட்டணத்தில் வாடகைக்கு விடப்படும். கூட்டரங்கம் கட்டப்பட உள்ளதையொட்டி அங்கிருந்த 13 பெரிய மரங்கள் அகற்றப்பட்டு மாற்று இடத்தில் நடப்பட்டுள்ளது. கூட்டரங்கம் கட்டுவதற்கான திட்ட அறிக்கை சமர்ப்பித்த பிறகே அதற்கு எவ்வளவு நிதி தேவைப்படும் என்பது தெரிய வரும் என்றனர்.


Next Story