காமன்வெல்த் வலுதூக்கும் போட்டியில் பங்கேற்க முடியாமல் தவிக்கும் வீராங்கனை
நியூசிலாந்தில் நடைபெறும் காமன்வெல்த் வலுதூக்கும் போட்டியில் பங்கேற்க முடியாமல் வேலூர் வீராங்கனை தவித்து வருகிறார்.
நியூசிலாந்தில் நடைபெறும் காமன்வெல்த் வலுதூக்கும் போட்டியில் பங்கேற்க முடியாமல் வேலூர் வீராங்கனை தவித்து வருகிறார்.
வேலூர் வீராங்கனை
வேலூர் சத்துவாச்சாரி காந்திநகரை சேர்ந்தவர் லட்சுமி. மாநகராட்சி துப்புரவு பணியாளர். இவரது மகள் கவிதா (வயது 22). உடற்கல்வி ஆசிரியருக்கு படித்துள்ளார். இவருக்கு 5 ஆண்டுகளுக்கு முன்பு பளுதூக்குதல், வலுதூக்குதல், குத்துச்சண்டை உள்ளிட்ட போட்டிகளில் ஆர்வம் ஏற்பட்டுள்ளது. இந்த ஆர்வத்தை அடுத்து அதற்கான பயிற்சிகள் மேற்கொண்டார்.
இதன் காரணமாக 2020-ம் ஆண்டு மாநில அளவில் நடைபெற்ற குத்துச்சண்டை போட்டியில் முதல் இடத்தை பிடித்தார். பின்னர் பல்வேறு இடங்களில் மாநில அளவில் நடைபெற்ற பளுதூக்கும் போட்டியிலும் தங்கப்பதக்கங்களை வென்றார்.
மேலும் வலுதூக்கும் போட்டியில் மாநில அளவிலும், தேசிய அளவிலும் ஏராளமான பதக்கங்களை வாங்கி உள்ளார். குறிப்பாக கடந்த ஆண்டு கோவாவில் நடைபெற்ற தேசிய அளவிலான போட்டியில் 2-ம் இடமும், இந்த ஆண்டு கேரளாவில் நடைபெற்ற தேசிய அளவிலான போட்டியில் 2-ம் இடமும் பிடித்து இதுவரை 30-க்கும் மேற்பட்ட பதக்கங்களை பெற்றுள்ளார்.
ரூ.3 லட்சம் தேவை
இந்தநிலையில் வருகிற நவம்பர் மாதம் நியூசிலாந்தில் தொடங்க உள்ள காமன்வெல்த் வலுதூக்கும் சாம்பியன் போட்டியில் 63 கிலோ எடைபிரிவில் கலந்து கொள்ள தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த போட்டியில் வேலூர் மாவட்டத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ள முதல் வீராங்கனை என்ற பெருமையை பெற்றுள்ளார். ஆனால் நியூசிலாந்து செல்ல ரூ.3 லட்சம் செலுத்த வேண்டும். ஆனால் கவிதா ஏழை குடும்பத்தை சேர்ந்தவர் என்பதால் அவரால் பணம் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தந்தையை இழந்த கவிதா தாயின் சொற்ப வருமானத்தில் பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.
கவிதாவுக்கு மாவட்ட கலெக்டர் குமாரவேல்பாண்டியன் நேற்று ரூ.50 ஆயிரம் தனது விருப்ப நிதியில் இருந்து வழங்கினார். கூடுதலாக ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் வரை தேவைப்படுவதால் பயிற்சியாளர்கள் உதவி கேட்டு கோரிக்கை வைத்துள்ளனர்.