நண்பர்களுடன் கிணற்றில் குளித்த பிளஸ்-1 மாணவன் சாவு


நண்பர்களுடன் கிணற்றில் குளித்த பிளஸ்-1 மாணவன் சாவு
x

கணியம்பாடி அருகே நண்பர்களுடன் கிணற்றில் குளித்த பிளஸ்-1 மாணவன் பரிதாபமாக இறந்தார்.

வேலூர்

பிளஸ்-1 மாணவன்

வேலூர் மாவட்டம் கணியம்பாடி அருகே நஞ்சுகொண்டாபுரம் ஊராட்சி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் சரவணன், டைல்ஸ் ஒட்டும் தொழிலாளி. இவரது மனைவி ஜீவிதா. இவர்களுக்கு பத்மப்பிரியன் (16) என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

பத்மப்பிரியன் கீழ்அரசம்பட்டு அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். பள்ளியில் சனிக்கிழமை பிளஸ்-1 மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு நடத்தப்பட்டது.

சிறப்பு வகுப்பு முடிந்ததும் பத்மப்பிரியன் தனது நண்பர்களுடன் கீழ்அரசம்பட்டில் உள்ள விவசாய கிணற்றில் குளிக்க சென்றார்.

கிணற்றில் மூழ்கி சாவு

நண்பர்களோடு குளித்தபோது தண்ணீரில் மூழ்கிய பத்மப்பிரியன் நீண்ட நேரமாகியும் வெளியே வரவில்லை.

இதனால் அதிர்ச்சடைந்த சக மாணவர்கள் கூச்சலிடவே, அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து கிணற்றில் மூழ்கிய மாணவனை தேடினர்.

நீண்ட நேர தேடலுக்கு பின்பு சேற்றில் சிக்கியிருந்த பத்மப்பிரியனை பிணமாக அந்த பகுதி மக்கள் மீட்டனர். இது குறித்து தகவல் அறிந்த வேலூர் தாலுகா போலீசார் விரைந்து சென்று, உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story