தேனியில் பிளஸ்-2 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை; காதலன் உள்பட 5 பேர் மீது வழக்கு
தேனியில் பிளஸ்-2 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். தற்கொலைக்கு தூண்டியதாக அவரது காதலன் உள்பட 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
தேனியில் பிளஸ்-2 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். தற்கொலைக்கு தூண்டியதாக அவரது காதலன் உள்பட 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
பிளஸ்-2 மாணவி தற்கொலை
தேனி அல்லிநகரம் அருகே உள்ள பின்னதேவன்பட்டி தெற்குத்தெருவை சேர்ந்தவர் இலங்கைராஜா. இவர் செங்கல் சூளையில் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இவரது மகள் பாண்டீஸ்வரி (வயது 17). இவர் தேனியில் உள்ள தனியார் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.
இந்தநிலையில் நேற்று காலை இலங்கைராஜாவும், அவரது மனைவியும் வழக்கம்போல் வேலைக்கு சென்றுவிட்டனர். இதனால் பாண்டீஸ்வரி மட்டும் வீட்டில் தனியாக இருந்தார்.
இதற்கிடையே இலங்கைராஜாவின் வீடு நீண்டநேரமாக பூட்டிக்கிடப்பதை பார்த்த அக்கம்பக்கத்தினர், கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது பாண்டீஸ்வரி தூக்கில் பிணமாக தொங்கியதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து அவர்கள் தேனி அல்லிநகரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
சாலை மறியல்
அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரது வீட்டில் போலீசார் சோதனை செய்தபோது, அங்குள்ள நாற்காலியில் பாண்டீஸ்வரி எழுதி வைத்திருந்த கடிதம் ஒன்று இருந்தது. அதனை போலீசார் எடுத்து பார்த்தனர். அதில், தனது தற்கொலைக்கு உறவினரும், அவரது மகனும் காரணம் என்று குறிப்பிட்டிருந்தார்.
இதற்கிடையே தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முன்பு மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் திடீரென்று நேற்று மதியம் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது மாணவியின் சாவுக்கு காரணமான நபர்களை கைது செய்ய வேண்டும் என்று கூறி அவர்கள் போராட்டம் நடத்தினர். இதுகுறித்து தகவல் அறிந்த க.விலக்கு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, மாணவியின் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சம்பந்தப்பட்ட நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் உறுதியளித்தனர். இதையடுத்து மாணவியின் உறவினர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த மறியலால் தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முன்பு தேனி-மதுரை சாலையில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
5 பேர் மீது வழக்கு
இதுதொடர்பாக அல்லிநகரம் போலீசார் நடத்திய விசாரணையில், தற்கொலை செய்த மாணவியும், அவரது உறவினரான சுதாவின் மகனான விக்ரம் (25) என்பவரும் காதலித்து வந்தனர். ஆனால் இவர்களது காதலுக்கு காதலனின் வீட்டில் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. மேலும் பாண்டீஸ்வரியை சுதா கண்டித்ததாக தெரிகிறது. இதனால் அவர் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.
இதையடுத்து மாணவியை தற்கொலைக்கு தூண்டியதாக விக்ரம், அவரது தாய் சுதா உள்பட 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.