திருமங்கலம் அருகே செல்போனில் ஆபாச படங்கள் காண்பித்து அரசு ஆஸ்பத்திரியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நோயாளி-போக்சோ வழக்கு பாய்ந்தது
திருமங்கலம் அருகே அரசு ஆஸ்பத்திரியில் செல்போனில் ஆபாச படம் காண்பித்து சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நோயாளி மீது போக்சோ வழக்கு பாய்ந்தது.
திருமங்கலம்,
திருமங்கலம் அருகே அரசு ஆஸ்பத்திரியில் செல்போனில் ஆபாச படம் காண்பித்து சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நோயாளி மீது போக்சோ வழக்கு பாய்ந்தது.
பாலியல் தொல்லை
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே ஆஸ்டின்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் காசநோய் சிறப்பு சிகிச்சை பிரிவு உள்ளது. இங்கு ஆஸ்துமா நோயால் அவதிப்பட்டு வந்த மதுரையை சேர்ந்த பெண் ஒருவர், கடந்த 22-ந் தேதி சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அவருடைய மகளான 14 வயது சிறுமி உடனிருந்து கவனித்து வந்தார்.
இந்தநிலையில் வெந்நீர் வாங்குவதற்காக அந்த சிறுமி அருகில் உள்ள ஆண்கள் வார்டுக்கு சென்றார். அப்போது அங்கு சிகிச்சையில் இருந்த ராமநாதபுரம் மாவட்டம் வெளிப்பட்டினம் பகுதியை சேர்ந்த சரவணகுமார்(40), சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. மேலும், செல்போனில் ஆபாச படங்களை காண்பித்து ஒரு வாரமாக சிறுமிக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்தாராம்.
போக்சோ சட்டத்தில் வழக்கு
இதுகுறித்து சிறுமி, அந்த வார்டில் பணியாற்றிய நர்சிடம் கூறினார். அவர் இது தொடர்பாக திருமங்கலம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி, சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சரவணகுமார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.