விஷம் குடித்த கள்ளக்காதலி சாவு
பண்ருட்டி ஆட்டோ டிரைவர் கொலை செய்யப்பட்டதையடுத்து விஷம் குடித்த அவரது கள்ளக்காதலியும் இறந்தார்.
விழுப்புரம்:
பண்ருட்டி அருகே உள்ள அங்குசெட்டிப்பாளையத்தை சேர்ந்தவர் பிரகாஷ் மனைவி பூமிகா(வயது 22). இந்த தம்பதிக்கு திருமணமாகி 3 ஆண்டு ஆன நிலையில் ஒரு வயதில் குழந்தை உள்ளது.
பூமிகா இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் வீடியோ எடுத்து வெளியிடுவதில் ஆர்வமாக இருந்துள்ளார். இதன் காரணமாக அவரை ஏராளமானோர் இன்ஸ்டாகிராமில் பின் தொடர்ந்து வந்துள்ளனர்.
இந்த நிலையில் பூமிகா, தனது கணவரை விட்டு பிரிந்து அங்குசெட்டிப்பாளையத்தில் உள்ள தனது தாய் வீட்டில் வசித்து வந்தார். பின்னர் பண்ருட்டியில் உள்ள பேக்கரி கடை ஒன்றில் அவர் வேலை செய்தார். அப்போது அவர், அங்குள்ள ஆட்டோ டிரைவர்களான களத்துமேடு பகுதியை சேர்ந்த சுமன்(25), தட்டாஞ்சாவடியை சேர்ந்த சக்திவேல்(32) ஆகியோருடன் நட்பாக பழகி வந்தார்.
டிரைவர் கொலை
கள்ளக்காதலி பூமிகா யாருக்கு சொந்தம் என்று சுமனுக்கும், சக்திவேலுக்கும் இடையே போட்டி நிலவியது. இதையடுத்து கடந்த 9-ந்தேதி சுமன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் சக்திவேலை நேரில் அழைத்து பூமிகாவுடன் பேசுவதை நிறுத்திவிடுமாறு கூறினர். ஆனால் அவர் மறுத்து விட்டார்.
இதனால் ஏற்பட்ட தகராறில் சக்திவேலை சுமனின் ஆதரவாளர்கள் சராமரியாக வெட்டி கொலை செய்தனர். இது தொடர்பாக புதுப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து சுமன், குணா, வசந்தகுமார், பட்டிஸ்டா குணா ஆகிய 4 பேரை கைது செய்தனர்.
கள்ளக்காதலி சாவு
சக்திவேல் கொலை செய்யப்பட்டதில் இருந்து பூமிகா மன விரக்தியில் இருந்துள்ளார். இதனிடையே வீட்டை விட்டு வெளியேறிய பூமிகா விழுப்புரம் புதிய பஸ் நிலையத்திற்கு பஸ்சில் வந்துள்ளார். அங்கு விஷத்தை எடுத்து குடித்துவிட்டு மயங்கிய நிலையில் கிடந்தார்.
இதுகுறித்த தகவலின்பேரில் விழுப்புரம் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பூமிகாவை மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று அதிகாலை இறந்தார்.
இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.