ரூ.50 ஆயிரம் லஞ்சம் கேட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம்


ரூ.50 ஆயிரம் லஞ்சம் கேட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம்
x

மதுரையில் ஆம்னி பஸ் உரிமையாளரிடம் ரூ.50 ஆயிரம் லஞ்சம் கேட்ட புகாரில் மதுரை போலீஸ் இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளார்.

மதுரை


மதுரையில் ஆம்னி பஸ் உரிமையாளரிடம் ரூ.50 ஆயிரம் லஞ்சம் கேட்ட புகாரில் மதுரை போலீஸ் இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளார்.

போலீஸ் இன்ஸ்பெக்டர்

மதுரை ஒத்தக்கடை போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக இருப்பவர் முருகேசன். கடந்த மாதம், சென்னையில் இருந்து மதுரைக்கு ஆம்னி பஸ் ஒன்று வந்தது. அந்த பஸ், ஒத்தக்கடை பகுதியில் வந்தபோது, கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் பெண் ஒருவர் பலத்த காயம் அடைந்தார். தொடர் சிகிச்சையில் இருந்த அந்த பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த விபத்து தொடர்பாக ஆம்னி பஸ் டிரைவர் மீது ஒத்தக்கடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். ஆம்னி பஸ்சை பறிமுதல் செய்து போலீஸ் நிலையத்தில் நிறுத்தி வைத்தனர்.

லஞ்சம் கேட்டதாக ஆடியோ

இதற்கிடையே, பல நாட்கள் ஆகியும் அந்த ஆம்னி பஸ்சை விடுவிக்காமல் இருந்ததாக தெரிகிறது. இதனால், ஆம்னி பஸ் உரிமையாளர், ஒத்தக்கடை போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசனை செல்போனில் தொடர்பு கொண்டு பேசி உள்ளார். அப்போது பஸ்சை விடுவிக்க வேண்டும் என்றால் ரூ.50 ஆயிரம் லஞ்சம் தருமாறு கேட்டுள்ளார். ஆம்னி பஸ் உரிமையாளரிடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் லஞ்சம் கேட்ட ஆடியோ சமூக வலைதளங்களில் பரவியது.

இந்த ஆடியோ தொடர்பாக விசாரணை நடத்த தென் மண்டல ஐ.ஜி. அஸ்ரா கார்க் உத்தரவிட்டார். அதன்பேரில், மதுரை சரக டி.ஐ.ஜி பொன்னி விசாரணை நடத்தினார். விசாரணையில் இன்ஸ்பெக்டர் லஞ்சம் கேட்டது உறுதி செய்யப்பட்டது.

பணியிடை நீக்கம்

இதனை தொடர்ந்து, ஆம்னி பஸ் உரிமையாளரிடம் லஞ்சம் கேட்ட விவகாரத்தில் இன்ஸ்பெக்டர் முருகேசனை பணியிடை நீக்கம் செய்து மதுரை சரக டி.ஐ.ஜி. பொன்னி உத்தரவிட்டார். ஏற்கனவே, வழக்கு விசாரணைக்கு லஞ்சம் கேட்டதாக போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் மீது புகார் இருப்பதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.


Next Story