விருத்தாச்சலத்தில் திருட்டுபோன மோட்டார் சைக்கிளை நாகையில் ஓட்டி வரும் போலீஸ்காரர்
விருத்தாச்சலத்தில் திருட்டுபோன மோட்டார் சைக்கிளை நாகையில் ஓட்டி வரும் போலீஸ்காரர்
விருத்தாச்சலத்தில், திருட்டுபோன மோட்டார் சைக்கிளை நாகையில் போலீஸ்காரர் ஓட்டி வருகிறார். அவரிடம் இருந்து தனது மோட்டார் சைக்கிளை மீட்டுத்தரக்கோரி தஞ்சை சரக டி.ஐ.ஜி. கயல்விழியிடம் தொழிலாளி ஒருவர் புகார் கொடுத்துள்ளார்.
மோட்டார் சைக்கிள் திருட்டு போனது
கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அருகே உள்ள வேட்டைக்குடி பகுதியை சேர்ந்தவர் வெற்றிவேல்(வயது 40). விவசாய கூலி தொழிலாளி. இவர் தஞ்சை சரக டி.ஐ.ஜி. கயல்விழியிடம் நேற்று ஒரு புகார் மனு கொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது:-
நான் கடந்த 2018-ம் ஆண்டு ஜூலை 7-ந் தேதி சிவப்பு நிறத்தில் மோட்டார் சைக்கிள் ஒன்று வாங்கி ஓட்டி வந்தேன். 2021-ம் ஆண்டு டிசம்பர் 10-ந் தேதி இரவு விருத்தாச்சலம் காந்தி நகர் அருகே உள்ள சாவடி குப்பத்தில் உள்ள எனது அண்ணன் வீட்டின் எதிரில் எனது மோட்டார் சைக்கிளை நிறுத்தியிருந்தேன். மறுநாள் காலை எழுந்து பார்த்தபோது எனது மோட்டார் சைக்கிளை காணவில்லை. எனது மோட்டார் சைக்கிள் திருட்டு போனது குறித்து விருத்தாச்சலம் போலீஸ் நிலையத்தில் நான் புகார் கொடுத்தேன்.
அபராதம் கட்டுமாறு குறுந்தகவல்
இந்த நிலையில் கடந்த மாதம் எனது செல்போனுக்கு நாகை போலீஸ் நிலையத்தில் இருந்து ஒரு குறுந்தகவல் வந்தது. அதில் தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டியதால் ரூ.100 அபராதம் கட்ட வேண்டும் என்று அதில் குறிப்பிட்டு இருந்தது. ஏற்கனவே மோட்டார் சைக்கிள் காணாமல் போனதால் மனவேதனையில் இருந்த நான் இந்த குறுந்தகவலை கண்டு அதிர்ச்சி அடைந்தேன். இதனையடுத்து நான் எனது நண்பர்களுடன் நாகை மாவட்டத்திற்கு சென்று சில நாட்கள் எனது மோட்டார் சைக்கிளை தேடிப்பார்த்தேன்.
போலீஸ்காரரிடம் இருந்து மீட்டுத்தர வேண்டும்
அப்போது நாகை மாவட்டத்தில் உள்ள ஒரு போலீஸ் நிலையத்தில் போலீசாக வேலை பார்த்து வருபவர் எனது மோட்டார் சைக்கிளை வைத்திருப்பதும், அவர் சிறுவன் ஒருவனுடன் அந்த மோட்டார் சைக்கிளை ஓட்டிச்சென்றதும் தெரிய வந்தது.
அவர் போலீஸ்காரர் என்பதால் அவரிடம் எனது மோட்டார் சைக்கிள் குறித்து பேச பயமாக உள்ளது. எனவே தாங்கள் உரிய நடவடிக்கை எடுத்து திருட்டு போன எனது மோட்டார் சைக்கிளை அந்த போலீஸ்காரரிடம் இருந்து மீட்டுத்தர வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து விசாரணை நடத்த டி.ஐ.ஜி. கயல்விழி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
வினோதம்
திருட்டுபோன மோட்டார் சைக்கிளை போலீஸ்காரர் ஒருவர் ஓட்டி வருவதும், அதை மீட்டுத்தரக்கோரி டி.ஐ.ஜி.யிடம் தொழிலாளி ஒருவர் புகார் கொடுத்திருப்பதும் விேனாதமாக உள்ளது.