தாயை இழந்த 3 குழந்தைகளை வளர்க்க முன்வந்த ஏழை தம்பதி
தாயை இழந்த 3 குழந்தைகளை வளர்க்க ஏழை தம்பதி முன்வந்துள்ளனர்.
பொன்மலைப்பட்டி:
குடும்ப வன்முறை
பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் உலக அளவில் முக்கிய பிரச்சினையாக பார்க்கப்படுகிறது. திருமணம் என்ற பந்தத்துக்குள் நுழையும் ஆண், பெண் இருவரும் குடும்பத்தை கட்டிக்காத்து வழிநடத்தி செல்வதில் முக்கிய பங்கு வகிக்கிறார்கள். பெற்ற பிள்ளைகளை வளர்த்து, படிக்க வைத்து, திருமணம் செய்து கொடுப்பது என்பது ஒவ்வொரு பெற்றோரின் தலையாய கடமையாகும். அந்த கடமையில் இருந்து ஒரு ஆணோ, பெண்ணோ சறுக்கினாலும் பிள்ளைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும்.
கண்ணை மறைத்த ஆத்திரத்திலும், மதுபோதையிலும் உணர்ச்சிவசப்பட்டு செய்கிற செயல் ஒரு தலைமுறையையே அழித்துவிடுகிறது. ஒருவர் தான் செய்த குற்றத்துக்காக அவர் பாதிக்கப்படுவதோடு மட்டுமல்லாமல், தனது ரத்த உறவுகளையும் அனாதைகளாக தவிக்கவிடக்கூடிய நிலைக்கு தள்ளப்பட்டு விடுகிறார். பெரும்பாலும் குடும்ப வன்முறையால் கணவன், மனைவிக்கு இடையே ஏற்படும் சண்டை சச்சரவுகள் குழந்தைகளின் மனநிலையை பாதிப்பதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
கேள்விக்குறியாகும் எதிர்காலம்
அதிலும் ஒருபடி மேலே போய் கணவனால் மனைவி கொலை செய்யப்படும்போது, அந்த கணவனுக்கு சிறை தண்டனை கிடைக்கிறது. ஆனால் அதன்பிறகு அவர்களது குழந்தைகளை யார் வளர்ப்பது?, அவர்களது எதிர்காலம் என்ன?, அவர்களை யார் படிக்க வைப்பது? என்ற வலி நிறைந்த கேள்விகள் ஏராளம். சாலையில் செல்லும்போது ஏதாவது ஒரு சிறு குழந்தை வாகனம் மோதி அடிபட்டு விட்டால், அந்த குழந்தையை தூக்குவதற்கு எத்தனையோ பேர் துடித்துக் கொண்டு ஓடிவருவர்.
அதேநேரம் குடும்ப வன்முறையால் நடக்கும் கொலைகள், தற்கொலைகளுக்கு பிறகு, அந்த குடும்பத்தை சேர்ந்த குழந்தைகள் அனுபவிக்கும் வலியையும், வேதனையும் யார் அறிவார்கள்?. எதிர்காலமே இருண்டுபோன ஒரு பாவமும் அறியாத அந்த பிஞ்சு உள்ளங்களின் மனக்குமுறலுக்கு தாய், தந்தையை தவிர, வேறு யார் மருந்து போட முடியும். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் இதுபோன்ற கொடூர கொலை சம்பவங்கள் ஆங்காங்கே அரங்கேறி கொண்டு தான் இருக்கிறது.
மனைவி கொலை
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு திருச்சி பொன்மலைப்பட்டி பொன்னேரிபுரத்தை சேர்ந்த சபுராபீவி என்ற நிஷா (வயது 35) தனது கணவன் சதீஷ்குமாரால் தலையில் கல்லைப்போட்டு கொலை செய்யப்பட்டார். வெவ்வேறு மதத்தை சேர்ந்த இவர்கள் இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டவர்கள். இந்த தம்பதிக்கு 13 வயதில் சுவாதி என்ற மகளும், 11 வயதில் சந்தோஷ் என்ற மகனும், 7 வயதில் நிதிஷ்குரு என்ற மகனும் உள்ளனர்.
நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை கொலை செய்ததாக சதீஷ்குமார் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறினார். மனைவியை கொலை செய்த குற்றத்துக்காக சதீஷ்குமார் சிறையில் அடைக்கப்பட்டார். தாய் கொலை செய்யப்பட்டதாலும், தந்தை சிறையில் அடைக்கப்பட்டதாலும் அந்த தம்பதியின் 3 குழந்தைகளும் நிர்கதியானார்கள். தாயை பறிகொடுத்துவிட்டு தவிக்கும் அந்த குழந்தைகளை வளர்த்து கரை சேர்க்கும் பொறுப்பு யாருக்கு உள்ளது என்ற கேள்விக்கு விடை தெரியாமல் இருந்தது.
நிர்கதியான குழந்தைகள்
ஆனால் நிர்கதியான 3 குழந்தைகளையும் சபுராபீவியின் அக்காள் அமீர்பீவியும், அவரது கணவர் மைதீன் பாட்ஷாவும் வளர்க்க முன்வந்துள்ளனர். ஏழை தம்பதியான இவர்கள் அரியமங்கலம் காமராஜ்நகர் திருவள்ளுவர் தெருவில் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இவர்களது உறவினரான பெண் ஒருவர் கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து சென்றதால், அவர்களுடைய 4 குழந்தைகளையும் அமீர்பீவி-மைதீன் பாட்ஷா தான் வளர்த்து வருகிறார்கள். தற்போது இந்த தம்பதி கொலை செய்யப்பட்ட சபுராபீவியின் 3 குழந்தைகளையும் வளர்த்து வருகிறார்கள்.
இது குறித்து அமீர்பீவி கூறுகையில், 'எனது கணவர் துவாக்குடி வாழவந்தான்கோட்டையில் ஒரு தனியார் நிறுவனத்தில் மாதம் ரூ.14 ஆயிரம் சம்பளத்தில் வேலை செய்து வருகிறார். அவருக்கு ஒரு கண் மட்டுமே தெரியும். நாங்கள் வாடகை வீட்டில் தான் வசித்து வருகிறோம். ஆனாலும் எனது தங்கை சபுராபீவியின் 3 குழந்தைகளையும் நாங்களே வளர்ப்போம். அவர்களை அனாதைகளாக விடமாட்டோம். எங்களுக்கு போதிய வருமானம் இல்லாவிட்டாலும் அந்த குழந்தைகளை எப்படியாவது படிக்க வைத்து வளர்க்க வேண்டும் என்று ஆசைப்படுகிறோம். எங்களுக்கு அரசு மற்றும் நல்ல உள்ளம் படைத்தவர்கள் உதவ வேண்டும் என்று உருக்கமாக கூறினார்.