நெடுஞ்சாலையில் அபாய பள்ளம்
கொத்தங்குடி அருகே நெடுஞ்சாலையில் அபாய பள்ளத்தை சீரமைக்க வேண்டும் என வாகனஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மெலட்டூர்:
கொத்தங்குடி அருகே நெடுஞ்சாலையில் ஏற்பட்டுள்ள அபாய பள்ளத்தை சீரமைக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சாலையில் அபாய பள்ளம்
அம்மாப்பேட்டை ஒன்றியம், கொத்தங்குடி அருகே வெண்ணாற்றங்கரையில் களஞ்சேரி- பள்ளியக்ரஹாரம் இடையே உள்ள நெடுஞ்சாலையில் திடீரென அபாய பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் சாலை சேதமடைந்து காணப்படுகிறது.
இந்த வழியாக செல்லும் காந்தாவனம், கோவத்தகுடி, வெண்ணுகுடி, கொத்தங்குடி உள்பட கிராம மக்கள் மற்றும் பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருகின்றனர்.
விபத்து
இரவில் இந்த வழியாக மோட்டார் சைக்கிளில் செல்லும் வாகன ஓட்டிகள் சாலையில் பள்ளம் இருப்பது தெரியாமல் தடுமாறி கீழே விழுந்து காயம் அடைகின்றனர்.இந்த சாலை வழியாக செல்லும் சைக்கிள் மற்றும் மோட்டார் சைக்கிள்களின் டயர்கள் பெயர்ந்து கிடக்கும் ஜல்லி கற்களால் பஞ்சராகி வருகிறது.
சீரமைக்க வேண்டும்
சாலையில் ஏற்பட்டுள்ள அபாய பள்ளத்தால் வாகன விபத்து ஏற்பட்டு உயிர் பலி ஏற்படுவதற்கு முன்பு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.