திடீரென கீழே விழுந்த மின் கம்பம்; அதிர்ச்சியில் குழந்தை மயக்கம்
கொள்ளிடம் அருகே மின்கம்பம் ஒன்று சாய்ந்து கீழே விழுந்தது. இந்த அதிர்ச்சியில் குழந்தை மயக்கம் அடைந்தது.
கொள்ளிடம்:
கொள்ளிடம் அருகே மின்கம்பம் ஒன்று சாய்ந்து கீழே விழுந்தது. இந்த அதிர்ச்சியில் குழந்தை மயக்கம் அடைந்தது.
உயர்அழுத்த மின்கம்பம்
கொள்ளிடம் அருகே ஓலை கொட்டாய்மேடு மீனவ கிராமம் உள்ளது. இக்கிராமத்தில் உயர் அழுத்த மின்வினியோகம் செய்ய மின் கம்பங்கள் உள்ளன. இந்த கிராமத்தில் குடியிருப்பு பகுதிக்கு அருகாமையில் இருந்த ஒரு மின்கம்பத்தில், அந்த மின்கம்பம் கீழே விழாமல் இருக்க கட்டப்பட்ட ஸ்டே கம்பி எனப்படும் கம்பியானது சில மாதங்களுக்கு முன்பு அறுந்து விட்டது.பின்னர் அந்த கம்பிக்கு பதிலாக மின்கம்பம் கீழே சாயாமல் இருக்கும் வகையில் கயிறினால் இழுத்து கட்டப்பட்டது. இதனால் காற்று வீசும்போது அந்த மின்கம்பம் சாய்ந்து ஆடிக்கொண்டிருந்தது. இந்த நிலையில் நேற்று காற்று சற்று வேகமாக வீசியது. இதில் மேற்கண்ட மின்கம்பம் சாயாமல் இருக்க கட்டப்பட்டிருந்த கயிறு அறுந்து அந்த மின்கம்பம் சாய்ந்து கீழே விழுந்தது.
கீழே விழுந்தது
இதனால் மின் கம்பிகளும் அறுந்து கீழே விழுந்தன. அப்போது கீழே விழுந்த மின்கம்பத்துக்கு அருகாமையில் அப்பகுதியை சேர்ந்த 4 வயது ஆண் குழந்தை விளையாடி கொண்டிருந்தது. அப்போது அந்த குழந்தை மின்கம்பம் விழுந்த சத்தத்தில் மயக்கம் அடைந்து கீழே விழுந்தது.
இதனை அறிந்த அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து மயங்கி விழுந்த குழந்தையை மீட்டு சீர்காழி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதனை தொடர்ந்து மின்வாரிய ஊழியர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
எச்சரிக்கையாக இருந்ததால்...
உடனே மின்வாரிய ஊழியர்கள் விரைந்து வந்து மின்சாரத்தை துண்டித்தனர். இதனால் விபத்து ஏற்படுவது தவிர்க்கப்பட்டது.மேலும் அப்பகுதியை சேர்ந்தவர்கள் எச்சரிக்கையாக இருந்ததால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.எனவே கொட்டாய்மேடு கிராமத்தில் இதுபோன்று கீழே விழும் நிலையில் இருந்து வரும் மின் கம்பங்களை முக்கியத்துவம் செலுத்தி மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, மின்வாரிய அலுவலர்கள் மற்றும் ஊழியர்களுக்கு கொட்டாய்மேடு மீனவ கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.