மணப்பாறையில் மின்வாரிய ஊழியரின் வீடு தீயில் எரிந்து நாசம்
மணப்பாறையில் மின்வாரிய ஊழியரின் வீடு தீயில் எரிந்து நாசமானது.
மணப்பாறை, செப்.17-
மணப்பாறை கரிக்கான்குளம் பகுதியை சேர்ந்தவர் பத்மநாபன் (வயது 44). இவர் கரூர் மாவட்டம், காவல்காரன்பட்டியில் மின்வாரிய ஊழியராக பணியாற்றி வருகிறார். இவர் மாடியில் குடிசை அமைத்து வசித்து வருகிறார். நேற்று காலையில் இவர் குழந்தைகளை பள்ளிக்கு அழைத்து சென்றார். பின்னர் வீடு திரும்பிய போது, குடிசையில் தீப்பற்றி எரிந்தது. இதைகண்டு அதிர்ச்சி அடைந்த பத்மநாபன் மற்றும் அக்கம்பக்கத்தினர் தீயை அணைக்க முயன்றனர். ஆனால் அணைக்க முடியவில்லை. தகவல் அறிந்த மணப்பாறை தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை மேலும் பரவவிடாமல் தடுத்து அணைத்தனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதியில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதனால் பெரும் அசம்பாவிதம் ஏற்படுவது தவிர்க்கப்பட்டது. எனினும் இந்த விபத்தில் வீட்டில் இருந்த பொருட்கள், ஆவணங்கள் உள்ளிட்ட அனைத்து எரிந்து நாசமானது. இது தொடர்பாக மணப்பாறை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.