நீட் தேர்வுக்கு தயாராகி வந்த பயிற்சி டாக்டர் திடீர் தற்கொலை


நீட் தேர்வுக்கு தயாராகி வந்த பயிற்சி டாக்டர் திடீர் தற்கொலை
x

மருத்துவ மேல்படிப்புக்கான நீட் தேர்வுக்கு தயாராகி வந்த பயிற்சி டாக்டர் திடீரென தற்கொலை செய்து கொண்டார். மகன் இறந்த துக்கம் தாங்காமல் போலீஸ் ஏட்டுவும் உயிரை மாய்த்தார்.

மேலூர்,

மதுரை மாவட்டம் மேலூர் அருகே மேலவளவு போலீஸ் நிலையத்தில் ஏட்டாக வேலை பார்த்து வந்தவர் அழகன் (வயது 56). இவருடைய மனைவி நாச்சம்மாள். இவர்களுடைய மகன் தமிழ்வாணன்(24), மகள் சத்யபிரபா.

இதில் சத்யபிரபாவுக்கு திருமணம் ஆகிவிட்டது. மேலூரில் உள்ள காந்திநகரில் வாடகை வீட்டில் அழகன், நாச்சம்மாள், தமிழ்வாணன் வசித்து வந்தனர். தமிழ்வாணன் டாக்டர் படிப்பு முடித்துவிட்டு மதுரையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் பயிற்சி டாக்டராக வேலை செய்து வந்தார். மேலும் அவர் மருத்துவ மேற்படிப்புக்காக அடுத்த மாதம் 5-ந் தேதி நடைபெற உள்ள நீட் தேர்வுக்கு தயாராகி வந்தார்.

நேற்று அழகனுக்கும், நாச்சம்மாளுக்கும் இடையே குடும்ப தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் வீட்டில் தனி அறை ஒன்றில் நீட் தேர்வுக்கு படித்துக்கொண்டிருந்த தமிழ்வாணன் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

தந்தையும் தற்கொலை

இதை அறிந்து அழகன் மற்றும் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் இதுகுறித்து மேலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தமிழ்வாணனின் உடலை கைப்பற்றி மேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதற்கிடையே வீட்டில் இருந்த அழகனை திடீரென காணவில்லை. அவரை குடும்பத்தினர் தேடியபோது குளியல் அறையில் அழகன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

மகன் இறந்த துக்கத்தில் அழகனும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.


Next Story