போலீசாரை தள்ளிவிட்டு தப்பி ஓடிய கைதி
குடியாத்தத்தில் போலீசாரை தள்ளிவிட்டு கைதி தப்பி ஓடி தலைமறைவானார். அவரை 10 மணி நேரத்தில் போலீசார் மடக்கி பிடித்தனர்.
சாராய வழக்கில் கைது
குடியாத்தம் உட்கோட்டத்தில் சாராயமே இல்லாத நிலையை உருவாக்க வேண்டும் என வேலூர் சரக டி.ஐ.ஜி. முத்துசாமி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் ஆகியோர் உத்தரவிட்டுள்ளனர். இதனை தொடர்ந்து சாராயம் காய்ச்சுவது, விற்பனை செய்வது குறித்து தகவல் அளிக்க போலீசார் வாட்ஸ் அப் எண்களை தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து நேற்றுமுன்தினம் மாலையில் குடியாத்தம் அடுத்த செட்டிகுப்பம் பகுதியில் வாலிபர் ஒருவர் சாராயம் விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் குடியாத்தம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு இன்ஸ்பெக்டர் முரளிதரன் மற்றும் போலீசார் அப்பகுதிக்கு சென்று அங்கு சாராயம் விற்றுக்கொண்டிருந்த செட்டிகுப்பம் கிராமம் வன்னியர்வீதியை சேர்ந்த சூர்யா (வயது 21) என்பவரை கைது செய்தனர்.
தப்பி ஓட்டம்
அவரை நேற்றுமுன்தினம் இரவு மதுவிலக்கு போலீஸ் ஏட்டு சிவக்குமார் மற்றொரு ஏட்டு சிவக்குமார் ஆகியோர் காட்பாடி கோர்ட்டுக்கு அழைத்து சென்று ஆஜர் படுத்திவிட்டு குடியாத்தம் சிறையில் அடைக்க சூர்யாவை கொண்டுவந்தனர்.
அப்போது குடியாத்தத்தில் உள்ள ஒரு ஓட்டலில் இரவு உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்த சூர்யா திடீரென போலீசாரை தள்ளிவிட்டு தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் வேலூர் சரக டி.ஐ.ஜி. முத்துசாமி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் ஆகியோர் உத்தரவின் பேரில் குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி மற்றும் மதுவிலக்கு, சட்டம் ஒழுங்கு போலீசார் விடிய விடிய தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
மடக்கி பிடித்தனர்
இந்தநிலையில் நேற்று காலை குடியாத்தம் அடுத்த லிங்குன்றம் கால்வாய் அருகே ஒரு குடிசையில் சூர்யா பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து போலீசார் அங்கு விரைந்து சென்று சூர்யாவை மடக்கி பிடித்தனர்.
சூர்யா தப்பி ஓடிய சம்பவம் குறித்து குடியாத்தம் டவுன் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் லட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் ஜெகதீசன் ஆகியோர் வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
தப்பி ஓடிய கைதியை 10 மணி நேரத்தில் பிடித்த குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி உள்ளிட்ட போலீசாரை அதிகாரிகள் பாராட்டினர்.