பயங்கரவாதிகளுடன் தொடர்பில் இருந்த கைதியை காவலில் எடுத்து போலீஸ் விசாரணை
ஐ.எஸ். பயங்கரவாதிகளுடன் தொடர்பில் இருந்த கைதியை காவலில் எடுத்து போலீசார் விசாரணை நடத்தினர்.
சிறையில் அடைப்பு
தர்மபுரியை சேர்ந்தவர் ஆசிக் (வயது 22). இவர் சேலம் செவ்வாய்பேட்டை பகுதியில் தங்கி தனியாக வெள்ளி தொழில் செய்து வந்தார். இவர் ஐ.எஸ். பயங்கரவாதிகளுடன் தொடர்பில் இருப்பதாக என்.ஐ.ஏ. அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. என்.ஐ.ஏ. அதிகாரிகள் சில நாட்களுக்கு முன்பு சேலத்தில் முகாமிட்டு கண்காணித்தனர்.
அப்போது அவர் தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்பில் இருப்பதை உறுதிப்படுத்தினர். இதையடுத்து ஆசிக்கை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது செய்தனர். பின்னர் அவர் வசித்த வீட்டில் சோதனை நடத்திய போது அங்கு விலை உயர்ந்த செல்போன் மற்றும் கம்ப்யூட்டர் சாதனங்கள் இருப்பது தெரிந்தது. அவற்றை பறிமுதல் செய்து ஆய்வுக்கு சென்னை அனுப்பி வைத்தனர். பின்னர் அவரை சேலம் டவுன் போலீசில் ஒப்படைத்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
மனு தாக்கல்
இந்த நிலையில் சேலம் சிறையில் உள்ள ஆசிக்கை காவலில் எடுத்து விசாரணை நடத்த அனுமதிக்குமாறு சேலம் ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்டு எண் 1-ல் சேலம் டவுன் போலீசார் மனுதாக்கல் செய்தனர். அதன் பேரில் ஒரு நாள் காவல் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.
இதையடுத்து ஆசிக்கை போலீசார் நேற்று காவிலில் எடுத்தனர். தொடர்ந்து காலை முதல் இரவு வரை அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணை முடிந்து ஆசிக்கை இன்று (சனிக்கிழமை) சேலம் மத்திய சிறையில் அடைக்கஉள்ளனர்.