தனியார் பஸ் கட்டுப்பாட்டில் இழந்து கார், மோட்டார் சைக்கிள் மீது மோதல்
திருவண்ணாமலை பஸ் நிலையம் அருகே தனியார் பஸ் கட்டுப்பாட்டில் இழந்து கார், மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
செங்கத்திலிருந்து இன்று மாலை தனியார் பஸ் ஒன்று திருவண்ணாமலை பஸ் நிலையத்திற்கு வந்தது.
அந்த பஸ் திருவண்ணாமலை மத்திய பஸ் நிலையம் அருகில் போளூர் சாலையில் வரும்போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து முன்புறம் சென்ற கார் மற்றும் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதனால் மோட்டார் சைக்கிளில் 2 குழந்தைகளையுடன் வந்த தம்பதியினர் கீழே விழுந்தனர். இதில் ஒரு குழந்தைக்கு லேசான காயம் ஏற்பட்டது. அத்துடன் விபத்துக்குள்ளான காரின் ஒரு பக்கம் சேதம் ஏற்பட்டது.
இதனால் அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
அந்த சமயத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக அவ்வழியாக சென்ற பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு உடனடியாக காரை நிறுத்தி விபத்தில் யாருக்கும் காயம் ஏற்பட்டிருந்தால் உடனடியாக அவர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கும்படி போலீசாருக்கு உத்தரவிட்டு சென்றதாக அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தெரிவித்தனர்.
இதையடுத்து உடனடியாக 108 ஆம்புலன்சு சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு காயம் அடைந்த சிறுவனையும், அவரது தந்தையையும் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
இதனால் அப்பகுதியில் சுமார் 20 நிமிடங்களுக்கு மேல் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. பின்னர் போக்குவரத்து போலீசார் போக்குவரத்தை சீர் செய்தனர்.
இதனால் சிறிது நேரம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.